சிறைக் கைதிகளை வழக்கறிஞர்கள் நேரடியாக சந்தித்துப் பேச எந்த தடையும் கூடாது : சென்னை ஐகோர்ட்

புழல் சிறையில் கைதிகள் தங்களது வழக்கறிஞர்களுடன் இண்டர்காம் மூலமாக மட்டுமே பேச வேண்டும் என விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அதுபோல எந்த நிபந்தனையும் விதிக்கக் கூடாது என சிறைத் துறை நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் ஆனந்தகுமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு ஆன்லைனில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். ஒரு நேரத்தில் ஒரு கைதியை மட்டுமே சந்திக்க அனுமதி வழங்கப்படும். சிறையில் கைதிகளுடன் இண்டர்காம் மூலமாக மட்டுமே பேச அனுமதிக்கப்படும் என்பன போன்ற புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அந்த நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது நடைமுறையில் சாத்தியமற்றது மட்டுமின்றி, கைதிகளுக்கான சட்ட உரிமையை பறிப்பது போலாகி விடும். எனவே கட்டுப்பாடுகளுக்கு தடை விதிக்க வேண்டும், என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஏ.டி. மரியா க்ளாட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.காசிராஜன், இந்த புதிய நடைமுறைகள் காரணமாக, விசாரணை கைதிகளை வழக்கறிஞர்கள் தடையின்றி சந்திப்பதில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளது. கைதிகள் தங்களது குறைகளை சுதந்திரமாக, வெளிப்படையாக தெரிவிப்பதில் சிக்கல்கள் உள்ளது. வழக்கறிஞர்களுக்கும் கழிப்பறை, குடிநீர் என எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை, என குற்றம் சாட்டினார்.

அதற்கு சிறைத் துறை நிர்வாகம் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக், கைதிகளை வழக்கறிஞர்கள் சந்திக்கும் நேரம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது, என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், புழல் சிறையில் கைதிகளை சந்திக்க வரும் வழக்கறிஞர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும்படி கடந்தாண்டு நிர்வாக ரீதியாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அமல்படுத்தப்பட்டதா? என அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்படும், என பதிலளிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், கைதிகள் தங்களது வழக்கறிஞர்களுடன் இண்டர்காம் மூலமாக பேசினால் அந்த உரையாடல் பதிவு செய்யப்படும் என்ற அச்சம் கைதிகளுக்கு ஏற்படும். எனவே, கைதிகளை வழக்கறிஞர்கள் நேரடியாக சந்தித்துப் பேசுவதற்கு எந்த தடையும் விதிக்கக் கூடாது.

ஒருநேரத்தில் ஒரு கைதியை மட்டுமே பார்க்க வேண்டுமென்பதையும் மாற்றியமைக்க வேண்டும். கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞர்களின் உடைமைகளை பாதுகாப்பாக வைக்க தனி அறை மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சிறைத்துறை டிஜிபி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அத்துடன் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்.1-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.