“நமது பிரதமருக்கு நான் ஒரு விஷயத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். தயவு செய்து ஒன்றுக்கு இரண்டு தடவை அல்ல, 100 தடவை சிந்தியுங்கள். அண்டை நாடுகளுடன் அமைதியான தீர்வை கண்டடைய வேண்டும். நட்பு நாடுகளை மாற்ற முடியும். அண்டை நாடுகளை மாற்ற முடியாது. அண்டை நாடுகளுடன் நட்புறவைக் கடைப்பிடித்தால், நாம் முன்னேறுவோம், வேகமாக முன்னேறுவோம்” என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கான 2 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ஃபரூக் அப்துல்லா பேட்டி அளித்துள்ளார். தேர்தல் முடிவு எவ்வாறு இருக்கும் என்ற கேள்விக்கு பதில் அளித்த ஃபரூக் அப்துல்லா, “காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தது நல்லது என்று நினைக்கிறேன். தேசிய மாநாட்டு கட்சியும் காங்கிரஸும் தங்கள் பணிகளை நன்றாக செய்யும் என்று நான் நம்புகிறேன். மற்றவை பற்றி என்னால் சொல்ல முடியாது. அது மக்களைப் பொறுத்தது” என்று கூறினார்.
பொறியாளர் ரஷீத் என்று அழைக்கப்படும் அவாமி இத்தேஹாத் கட்சித் தலைவர் அப்துல் ரஷீத், தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்டுத்துவார் என்ற கேள்விக்கு, “அவர் டெல்லியைச் சேர்ந்தவர் என்பதையும், அவர் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதையும், வாக்குகளைப் பிரிப்பதில் அவர் பங்கு வகிக்கிறார் என்பதையும் காலம் நிரூபிக்கும். அதுதான் அவனுடைய வேலை” என ஃபரூக் அப்துல்லா குறிப்பிட்டார்.
தேர்தலில் வெற்றி பெற்று தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைக்குமானால் அந்த அரசு பலவீனமாக இருக்கும் என்ற விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஃபரூக் அப்துல்லா, “இது ஒரு வலிமையான அரசாங்கமாக இருக்கும். ஜம்மு காஷ்மீருக்கு கண்ணியத்தையும் கவுரவத்தையும் திரும்பக் கொண்டுவரும் அரசாக இது இருக்கும். பலவீனமான அரசாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்காக நான் வருந்துகிறேன். அவர்கள் தங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் இன்னமும் முடிவுக்கு வராதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஃபரூக் அப்துல்லா, “ஜம்மு காஷ்மீரில் இன்று பயங்கரவாதம் உச்சத்தில் உள்ளது. பயங்கரவாதம் தொடரும். அது அழிந்துபோகாது. மக்களை இணைப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்காத வரை பயங்கரவாதம் அழியாது” என தெரிவித்தார்.
பாகிஸ்தான் உடனான இந்தியாவின் உறவு குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஃபரூக் அப்துல்லா, “சீனா உடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்துகிறதே அது ஏன்? 2 ஆயிரம் கிலோ மீட்டர் நிலப்பரப்பு அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் தொடர்ந்து முன்னேறி வருகிறார்கள். நமது பிரதமருக்கு நான் ஒரு விஷயத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். தயவு செய்து ஒன்றுக்கு இரண்டு தடவை அல்ல, 100 தடவை சிந்தியுங்கள். அண்டை நாடுகளுடன் அமைதியான தீர்வை கண்டடைய வேண்டும். நட்பு நாடுகளை மாற்ற முடியும். அண்டை நாடுகளை மாற்ற முடியாது. அண்டை நாடுகளுடன் நட்புறவைக் கடைப்பிடித்தால், நாம் முன்னேறுவோம், வேகமாக முன்னேறுவோம்.
ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றுக்குப் பணத்தைச் செலவழிப்பதை விட, நமது மக்களின் வளர்ச்சிக்காக இன்னும் அதிகமாக நம்மால் செய்ய முடியும். எனவே, அண்டை நாடுகளுடன் அமைதி வேண்டும். அதையே நான் வலியுறுத்துகிறேன். சார்க் கூட்டமைப்பு மீண்டும் இயங்க வேண்டும். பெரியண்ணன் என்ற முறையில் நாம் (இந்தியா) அண்டை நாடுகளுடன் நட்புறவைக் கொண்டிருக்க முடியும். நட்புறவு இல்லாததால் நாம் தோல்வி அடைகிறோம்” என்று ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.