கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, புதுக்கோட்டை வாசகர் பேரவை இணைந்து, ஶ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் “பயண இலக்கிய கருத்தரங்கிற்கு கல்லூரி தலைவர் குரு.தனசேகரன் தலைமை வகித்தார். கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய, பயண இலக்கிய எழுத்தாளரும், 28 நாடுகளில் பயணம் செய்தவரும், 100 க்கு மேற்பட்ட பயணநூல் படைத்தவருமான சங்கரன்கோயில் அருணகிரி தனது உரையில்,
உலகம் முழுவதும் சுற்றி வர வேண்டும் எண்ணத்தை மனதில் வளர்த்துக் கொள்ளுங்கள். அது புதிய சிந்தனைகளையும், கலாச்சாரம் பண்பாடுகளையும் அறியச் செய்யும். பயணம் என்பது தெரியாத கருத்துக்களை புரிய வைப்பது. ஜப்பான், நார்வே, ஸ்விடன் போன்ற நாடுகளில் பயணம் செய்து பார்த்த போது அங்குள்ள மக்கள் நேரத்தை எவ்வளவு முக்கியமாக கருதுகிறார்கள் என்பதை உணர முடிந்தது. மூன்று மாதங்களுக்கு சூரியனையே பார்க்காமல் மின்சார ஒளியில் இரவிலேயே வாழும் மக்களை நார்வேயில் பார்க்க முடிந்தது. அமெக்காவில் ஐ.நா சபைக்கு அருகில் பிச்சை எடுப்பவர் 30 நாடுகளின் தேசிய கீதத்தை அறிந்து கொண்டு, அந்தந்த தேச மக்களின் தேசிய கீதத்தைப் பாடி பிச்சையெடுப்பதைக் காண முடிந்தது.
ஜப்பானில் புல்லட் ரயிலில் ஆட்கள் ஏறினாலும் ஏறாவிட்டாலும் நேரத்திற்கு புறப்படுவதைப்பார்க்க முடிந்தது. அந்த தேசத்தின் உணவு முறை மக்களின் வாழ்நாளை நீட்டிப்பதைக் காண முடிந்தது. ஆகவே ஒரு முறையாவது உலகை வலம் வர முயற்சி செய்யுங்கள். இந்த எண்ணங்கள் வளர உங்கள் வீடுகளில் ஒரு உலக உருண்டை, உலக வரைபடம், இந்திய வரைபடத்தை வாங்கி வையுங்கள். தினந்தோறும் பாருங்கள். எந்தெந்த நாடுகள் எங்கே இருக்கின்றன என்று பாருங்கள், அங்கே இருக்கும் மக்களை அறிந்து கொள்ள முயற்சியுங்கள். மேலும் கீழ்கண்ட கண்ட – பார்த்த சினிமாப் படத்தை திரும்ப பார்க்காதே,
கேட்ட பாட்டை திரும்பக்கேட்காதே, போன ஊருக்கு திரும்பப் போகாதே, ஒரே இடத்தில் வேலை பார்க்காதே போன்ற சூத்திரங்களையும் கடைபிடியுங்கள். இது புதியதை அறிய, கேட்க, பார்க்க உதவும். அதே போல எதிர்கால சந்ததி உங்களைப் பற்றி அறிய வேண்டுமானால் தினமும் உங்களைப் பற்றி எழுதுங்கள்.உங்கள் வாழ்க்கையை பதிவு செய்யுங்கள் என்றார். இக்கருத்தரங்கிற்கு கல்லூரி இயக்குனர் குமுதா, முதல்வர் செ.கவிதா, முன்னிலை வகிக்க, வரலாற்றுத்துறை மாணவி புவனேஸ்வரி வரவேற்புரை நிகழ்த்தினர். நிகழ்வைப் பற்றி வாசகர் பேரவைச் செயலர் சா.விஸ்வநாதன் அறிமுகவுரை ஆற்றினார். நிறைவாக தமிழ்த் துறை மாணவி ஆஷா பானு நன்றி கூறினார். நிகழ்வில் ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி, மருத்துவர் ச.ராம்தாஸ், கல்லூரி பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பேராசிரியர்கள், பல் துறை மாணவிகள் பங்கேற்றனர்.