டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். சவுத் பிளாக்கில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது.
இந்தச் சந்திப்பின் போது, சமக்ர சிக்ஷ அபியான் என்ற மத்திய அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும், இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு வேண்டும், சென்னை மெட்ரோ 2-ம் கட்டப் பணிகளுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்தார்.
முன்னதாக, தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த செப்.14-ம் தேதி சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில், அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “கல்வி மற்றும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதி தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்துவேன்” எனத் தெரிவித்தார்.
அதன்படி, நேற்று இரவு 8.30 மணிக்கு டெல்லி சென்றடைந்த முதல்வரை, டி.ஆர்.பாலு எம்.பி., டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து, இரவு டெல்லியில் தங்கிய முதல்வர் ஸ்டாலின், இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.
பிரதமருடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நேற்று டெல்லி வந்தேன். இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்தேன். இந்த சந்திப்பு ஓர் இனிய சந்திப்பாக அமைந்தது. பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் எங்களிடம் பேசினார். இந்த மகிழ்ச்சியான சந்திப்பை பயனுள்ள சந்திப்பாக மாற்றுவது பிரதமரின் கைகளில் தான் இருக்கிறது. சந்திப்பின் போது 3 முக்கியக் கோரிக்கைகளை வைத்துள்ளோம்.
முதலாவதாக, சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்டப் பணிகளைப் போல் 2-ம் கட்டப் பணிகளையும் மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து நடத்த வேண்டும். அதற்கான மத்திய அரசின் நிதியை தாமதமின்றி விடுவிக்க நடவடிக்கை வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன். இரண்டாவதாக, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய முதல் கட்டத் தவணையை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்.
மூன்றாவதாக, தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதரப் பிரச்சினைகளை எடுத்துச் சொல்லியுள்ளோம். நமது மீனவர்களை சிறைப்பிடித்து இலங்கைக் கடற்படையினர் துன்புறுத்துகின்றனர். இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். இலங்கையின் புதிய அதிபரிடம் இதுபற்றி வலியுறுத்தக் கேட்டுக் கொண்டுள்ளேன்” என்றார்.