“அரசியல் என்பது சமூக சேவை, தேசத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மேம்பாடு என்பதுதான். ஆனால், தற்போது அது அதிகார அரசியலை மட்டுமே குறிக்கிறது” என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பகடேவுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பாஜக மூத்த தலைவரும், மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சருமான நிதின் கட்கரி உரையாற்றினார். அப்போது அவர், “அரசியலில் பிரச்சினை என்பது, பல்வேறு கருத்துகள் இருப்பது அல்ல. மாறாக, சிந்தனை இல்லாததே. சமூக சேவை, தேசத்தை கட்டியெழுப்புதல் மற்றும் வளர்ச்சி ஆகியவைதான் அரசியல். ஆனால், இப்போது அரசியலின் வரையறை அதிகார அரசியல் என்பதாக மாற்றப்பட்டுவிட்டது.
முன்பு, ஆர்.எஸ்.எஸ்.காரர்களாகப் பணிபுரிந்தபோது, பல இடையூறுகளைச் சந்தித்தோம். அப்போது அங்கீகாரமும் மரியாதையும் இருக்கவில்லை. 20 ஆண்டுகளாக விதர்பாவில் கட்சிப் பணியாளராகப் பயணம் செய்து பணியாற்றினேன். அவசரநிலை பிரகடனத்துக்குப் பின் நடைபெற்ற பேரணிகள் மீது மக்கள் கற்களை வீசினர். நான் அறிவிப்பு செய்ய பயன்படுத்திய ஆட்டோ ரிக்ஷாக்களை மக்கள் எரித்தனர்.
இப்போது ஆயிரக்கணக்கான மக்கள் என் பேச்சைக் கேட்க வருகிறார்கள். ஆனால், இந்தப் புகழ் என்னுடையது அல்ல. உயிரைப் பணயம் வைத்து கடுமையாக உழைத்த ஹரிபாவ் பகடே போன்றவர்களால் கிடைத்தது. ஹரிபாவ் பகடே மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் உழைத்தவர். கட்சியில் எதுவுமே கிடைக்காவிட்டாலும் நல்ல முறையில் நடந்து கொள்பவரே நல்ல கட்சிக்காரர். எதையாவது பெறுபவர்கள் இயல்பாகவே நன்றாக நடந்து கொள்கிறார்கள்” என்று நிதின் கட்கரி கூறினார்.