அரசு மற்றும் அரசுப் பொதுத்துறை வேலை வாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீதம் அடிப்படையில், முதற்கட்டமாக 100 பேருக்கு விரைவில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டத்தின் கீழ், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஊராட்சி மற்றும் அங்குள்ள விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.
தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளுக்கும் ரூ. 86 கோடி மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 13 மாவட்டங்களில் வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்தாண்டு முதல்வர் கோப்பைக்கு 6,71,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். நிகழாண்டு 11 லட்சத்து 56 பேர் விண்ணப்பித்துள்ளனர். அண்மையில் நடைபெற்ற கேலோ விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிலேயே தமிழகம் 2-வது இடத்தை பெற்று பெருமை சேர்த்துள்ளது.
தமிழக விளையாட்டுத் துறையை பல்வேறு துறையினர் பாராட்டி வருகின்றனர். இதேபோல், தமிழக அரசு, ஏழை, எளிய, மாற்றுத்திறனாளி வீரர்களுக்குத் தொடர்ந்து உதவிகளைச் செய்து வருகின்றது. நிதி பெறவிரும்பும் விளையாட்டு வீரர்கள், தமிழ்நாடு வாகையர் பவுண்டேஷனில் எப்போதும் வேண்டுமானாலும் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
அதேபோல், அரசு மற்றும் அரசுப் பொதுத்துறை வேலை வாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீதம் அடிப்படையில், முதற்கட்டமாக 100 பேருக்கு விரைவில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது. கும்பகோணத்தில் ரூ. 3 கோடி மதிப்பிலான மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் எனச் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில், சர்வதேச தடகள வீராங்கனை ரோசி மீனா மற்றும் தேசிய ஹாக்கி வீரர் நந்தக்குமார் ஆகியோர் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். முன்னதாக மாங்குடியில் மொழிப்போர் தியாகி ரத்தினம் உருவச் சிலையையும், வளையப்பேட்டையில் ரூ. 54 லட்சத்தில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டம் மற்றும் நூலகத்தையும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எல்.கல்யாணசுந்தரம் எம்பி, எம்எல்ஏக்கள் சாக்கோட்டை க. அன்பழகன், எம்.எச்.ஜவாஹிருல்லா, துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மேயர்கள் க.சரவணன், சண்.ராமநாதன், துணை மேயர்கள் சு.ப.தமிழழகன், அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.