“செந்தில் பாலாஜி அமைச்சராவது குறித்து முதல்வர் முடிவு செய்வார்” – டி.கே.எஸ்.இளங்கோவன்

“செந்தில் பாலாஜி அமைச்சர் ஆவதற்கு தடையில்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. அதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்வார்.” என்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

சென்னையில், திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜாமீன் என்பது நீதிமன்றத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான சட்டப்படியான உரிமை. ஆனால், இவர்கள் தேவையில்லாமல் ஏறத்தாழ 15 மாத காலம், செந்தில் பாலாஜியை சிறையிலே வைத்திருந்தனர். அந்த வழக்கில் என்ன முகாந்திரம் இருக்கிறது என்று தெரியவில்லை. குற்றச்சாட்டுப் பதிவிலும்கூட சரியான முறையில், குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படவில்லை.

இந்த வழக்கில் இருந்து அவர் விடுதலை பெற்றுவிட்டால், 15 மாத காலமாக அவர் சிறையிலே இருந்தது, அவருடைய உரிமை மீறிய செயலாகவே கருதப்படும். அந்த உரிமையை குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்வது அனைத்து நாடுகளிலும் உள்ள நடைமுறை. காரணம், குற்றசாட்டு நிரூபிக்கப்படும் வரை அவர்கள் குற்றவாளிகள் என்று கருதப்படமாட்டார்கள். செந்தில் பாலாஜியை குற்றம் சாட்டப்பட்டவராகவே, 15 மாத காலம் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

அதுவும், அமலாக்கத்துறை திட்டமிட்டு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வந்தது, மத்திய அரசு தங்களுக்கு கீழ் உள்ள துறைகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தியதுள்ளதை நிரூபித்துள்ளது. பாஜக வாஷிங் மெஷினில் இணைந்தால் அவர்கள் தூய்மையாகிவிடுவார்கள். அப்படி குற்றம்சாட்டப்பட்ட பலருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. செந்தில் பாலாஜிக்கு காலதாமதாக வழங்கிய நீதியாகவே இதை கருதுகிறேன்.

காரணம், அவருக்கு அந்த உரிமையை வழங்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை. ஆனால், அமலாக்கத் துறை வலியுறத்தலின் காரணமாக, ஜாமீன் வழங்கி இவ்வளவு காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது என்று நான் கருதுகிறேன் என்று கூறினார்.

அப்போது அவரிடம், செந்தில் பாலாஜி அமைச்சர் ஆவது குறித்து கேட்கப்பட்டக் கேள்விக்கு, “அதுகுறித்து முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும். அமைச்சர் ஆவதற்கு தடையில்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.” என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.