திமுக ஆட்சிக்கு வந்தபிறகு கடந்த 40 மாதங்களில் 17.5 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இந்திய தேசிய உணவக சங்கத்தின் சார்பில் ‘இந்திய உணவகங்களின் உச்சி மாநாடு – 2024’ சென்னை எம்ஆர்சி நகரில் இன்று தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் மொத்தம் 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்து 1,200 உணவகங்களின் உரிமையாளர்கள், 100 சமையல் கலை நிபுணர்கள் பங்கேற்கின்றனர். இதில் 20-க்கும் மேற்பட்ட உணவகங்களின் அரங்குகள் இடம்பெற்றுள்ளன.
மாநாட்டை தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி தலைமை தாங்கி தொடங்கி வைத்து, உணவு அரங்குகளை பார்வையிட்டார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து 60 முன்னணி உணவகங்களின் தரப்பில் இருந்து குழு விவாதங்களில் பங்கேற்று உரையாற்றினர்.
முன்னதாக சென்னையின் பிரபல உணவகங்களான அடையார் ஆனந்தபவன், அஞ்சப்பர், அமராவதி, புகாரி, பெஞ்சராங், திண்டுக்கல் தலப்பாக்கட்டி, பொன்னுசாமி, ஜூனியர் குப்பண்ணா, ரத்னாகபே, சங்கீதா, வசந்தபவன், கங்கோத்ரி, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், காகடா ராம்பிரசாத் ஸ்வீட்ஸ், மில்கிவே, ஸ்ரீ மிட்டாய், அங்கிள் சாம்ஸ் கிச்சன் ஆகியவற்றின் உரிமையாளர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சக்கரபாணி கூறியது: “தமிழக அரசின் பொது விநியோக உணவு திட்டத்தில் துவரம் பருப்பும், பாமாயிலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மானிய விலையிலே வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் ரேஷன் கடைகளிலும் செப்டம்பர் மாதத்துக்கான பாமாயிலும், துவரம் பருப்பும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை.
ரேஷன் கடைகளில் பாக்கெட் போட்டு அனைத்துப் பொருட்களும் வழங்கும் திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த முதல்வருடன் கலந்தாலோசித்து வருகிறோம். அதேபோல கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்ட உளுந்தம் பருப்பையும், கோதுமை மாவையும் நிதிநிலைக்கு ஏற்ப மீண்டும் வழங்கிடவும் பரிசீலித்து வருகிறோம். பயோமெட்ரிக்கிற்கு பதிலாக கண் கருவிழி மூலம் ஸ்கேன் செய்து பொருட்களை பெறும் முறை 28 ஆயிரம் முழுநேர கடைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மீதமுள்ள கடைகளிலும் விரைவில் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் 3 லட்சம் பேர் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்திருந்தனர். அதில் 1.5 லட்சம் பேருக்கு சரிபார்ப்பு பணி முடிவடைந்து அவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. மீதமுள்ளவர்களுக்கு சரிபார்ப்பு பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. அப்பணி முடிவடைந்ததும் தகுதியான நபர்கள் அனைவருக்கும் குடும்ப அட்டை வழங்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்த 40 மாதங்களில் 17.5 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன” என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
இந்நிகழ்வில் இந்திய தேசிய உணவக சங்கத்தின் துணைத் தலைவரும், மோமோ உணவகத்தின் நிறுவனருமான சாகர் தர்யாணி, சென்னை மண்டல தலைவர்கள் கந்தர்வர் திங்கா, ஆர்.பாலச்சந்தர், ஜூபிளியன்ட் பாரதிய குழுமத்தின் நிறுவனர் ஹரி பாரதியா, கோகோ கோலா நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.