கடந்த சில ஆண்டுகளில் அறிவியல் சமூகத்தினருக்கான அங்கீகாரம் நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாகத் திருப்தி தெரிவித்துள்ள குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், அறிவியலில் நமது பழங்கால பெருமையை நாடு மீட்டெடுத்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலியல் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) 83வது நிறுவன தினம் புதுடெல்லியில் இன்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், தற்கால சூழ்நிலையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மென்மையான ராஜதந்திரம், தேசிய பாதுகாப்புடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய இரண்டும் ஒருங்கிணைந்தவை.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான முதலீடு நீடிக்கும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு இந்த நாட்களில் பாதுகாப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. எனவே முதலீடு என்பது நாட்டுக்கானது; வளர்ச்சிக்கானது; நிலைத்தன்மைக்கானது.
கடந்த சில ஆண்டுகளில் அறிவியல் சமூகத்திற்கான அங்கீகாரம் அதிகரித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்விஷயத்தில் அரசு மிகவும் தீவிரமாக இருப்பதும் இதற்கு ஒரு காரணம். பிரதமரின் இதயமும் ஆன்மாவும் விஞ்ஞான சமூகத்தில் ஆழமாக உள்ளது. இந்திய விஞ்ஞானிகளின் ஆற்றல் மீது பிரதமர் கொண்டுள்ள மரியாதை மற்றும் நம்பிக்கை பாராட்டுக்குரியது.
நமது விஞ்ஞானிகள் தங்களது ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும், விரிவுபடுத்தவும், அவர்களின் திறமைகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், தங்களது புதுமையான திறன்களை வெளிக்கொணர்வதன் மூலம் நாட்டிற்கு பங்களிக்கவும் சாதகமான ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு தற்போது உருவாகி வருகிறது.
பெரு நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதிக முதலீடு செய்ய வேண்டும். ஆட்டோமொபைல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்திய நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொண்டுள்ளன. நமது நாட்டின் அளவு, அதன் திறன், அதன் நிலை மற்றும் அதன் வளர்ச்சிப் பாதை ஆகியவற்றைப் பார்க்கும்போது, நமது பெரு நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஈடுபட முன்வர வேண்டும்.
சி.எஸ்.ஐ.ஆர் விஞ்ஞான ரீதியாக ஒரு கிரியா ஊக்கி. இது உங்கள் நிறுவன நாள், ஆனால் இது இந்தியாவின் உறுதியான அடித்தளத்துடன் ஒருங்கிணைந்து இணைக்கப்பட்டுள்ளது. இந்த கிரகத்தில் மிகவும் துடிப்பான, செயல்பாட்டு ஜனநாயகத்தின் அடித்தளங்களை நீங்கள் உறுதிப்படுத்துகிறீர்கள். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எழுச்சி பெற்று வரும் ஒரு தேசத்தின் அடித்தளத்தை நீங்கள் உறுதிப்படுத்துகிறீர்கள். மேலும், எழுச்சி தடுக்க முடியாதது.
இந்திய கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான தற்போதைய அணுகுமுறை கவலை அளிப்பதாக உள்ளது. வெறும் உதட்டளவில் மட்டும் பேசுவதை விட கணிசமான பங்களிப்மே மிகவும் முக்கியம். கல்வி நிறுவனங்களுக்குள் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் கல்வி ஆதாயங்களுக்காக மட்டுமே உந்தப்படக்கூடாது. ஆராய்ச்சி என்பது ஒரு உருவகப்படுத்துதல் அல்ல. ஆராய்ச்சி என்பது ஆராய்ச்சிதான்.
நவீன இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை வடிவமைப்பதில் சிஎஸ்ஐஆர் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தியாவின் அறிவியல், மிக நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது. நாம் நமது வரலாற்று கண்ணோட்டத்திற்குள் சென்றால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நமது நாடு, அறிவியல் வலிமையைக் கொண்டிருந்ததைக் காணலாம். நாம் உலகளாவிய தலைவர்களாக இருந்தோம்; அறிவியல் அறிவு என்று வரும்போது நாம் உலகின் மையமாக இருந்தோம். இப்போது அறிவியல் உலகில் நமது கடந்த கால பழமையான பெருமையை மீண்டும் பெறுவதற்கான பாதையில் நமது நாடு உள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.