முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியதை அடுத்து கரூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 15 மாதங்களுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்தார். இந்த நிலையில் இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானதும் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் திரண்ட திமுகவினர் அங்கிருந்த அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி, செந்தில் பாலாஜியை வாழ்த்தி கோஷங்களை எழுப்பி, நடனமாடி கொண்டாடினர். தொடர்ந்து சுமார் 1 மணி நேரத்துகும் மேலாக அப்பகுதியில் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், வருங்கால அமைச்சர், நிரந்தர அமைச்சர் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
முன்னாள் எம்எல்ஏ-வான காமராஜ், பாண்டியன் உள்ளிட்ட கரூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களும் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். இதனால் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருப்பதற்காக கரூர் டிஎஸ்பி-யான செல்வராஜ், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.