“பூணூல் என்பது தமிழகத்தில் ஏதோ ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் அணிவது அல்ல. இந்து தர்மத்தைக் கடைப்பிடிக்கக் கூடிய எல்லா சமூகத்தினரும் சமய சடங்குகளில் அணிவதுதான். எனவே இது இந்து மதத்தை பின்பற்றுபவர்களுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சவால்,” என்று நெல்லை பூணூல் அறுப்பு சம்பவத்துக்கு இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலியில் கடந்த 21-ம் தேதி மாலை 4:30 மணி அளவில் பொதுவீதியில், பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில், சென்று கொண்டிருந்த ஒரு அப்பாவி பிராமண இளைஞரை நான்கு பேர் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்து வழிமறித்து அவரது பூணூலை அறுத்து இனி பூணூல் அணிந்து செல்லக்கூடாது என மிரட்டி சென்றுள்ளனர். இத்தகைய அநாகரிக செயலால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட அந்த இளைஞரின் தந்தை இதுகுறித்து பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகார் கொடுத்து இரண்டு நாட்கள் ஆகியும் இன்னும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, கைது செய்யப்படவில்லை. மேலும் காவல்துறை அப்பட்டமான பொய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக அறிகிறோம். தமிழகத்தில் நடக்கும் அனைத்து விதமான பயங்கர சம்பவங்களுக்கும் தமிழக காவல்துறை பொய்யான காரணங்களேயே கூறியது நினைவு இருக்கலாம்.
கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு மனித வெடிகுண்டு வெடித்தபோது காவல்துறை உயர் அதிகாரிகளே எப்படியெல்லாம் நாடகம் ஆடினர் என்பதை தமிழக மக்கள் இன்னமும் மறக்கவில்லை. அதுபோல, தற்போதும் திமுகவின் மானத்தை காப்பாற்றுவதாக கருதி கொண்டு காவல்துறை இவ்வாறு செயல்படுவது வேதனையானது, வெட்கக்கேடானது.
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு பல இடங்களில் நாத்திக அமைப்பினர் பூணூல் அறுப்பு போராட்டம் நடத்துவதும், பன்றிக்கு பூணூல் அணிவிப்பது போன்ற அநாகரிக சம்பவங்களையும் பார்த்தோம்.
பழனியில் திராவிட ஆன்மிக மாடல் ஆட்சியில் உலக முருக பக்தர்கள் மாநாடு எனும் நாடகத்தில் திராவிட கழகத்தினர் இந்து சமயத்தை இழிவுபடுத்தும் பிரச்சார புத்தகங்களை கொடுத்தனர். இச்செய்தியை ஆன்மிக வேடதாரியான இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தனது செல்வாக்கை பயன்படுத்தி ஊடகங்களில் செய்தி வெளிவராமல் பார்த்துக்கொண்டார்.
இந்து மதத்தையும் இந்து தெய்வங்களையும் இழிவுபடுத்தி பேசுவதும் சர்வ சுதந்திரமாக நடைபெற்று வருகிறது. தமிழக அரசும் காவல்துறையும் இதில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது. அதனுடைய உச்சகட்டம் தான் தனிமனித தாக்குதல். இது அப்பட்டமான மனித உரிமை மீறல். கருத்து சுதந்திரம் என பேசும் திராவிட நாடகத்தின் லட்சணம் இது தான்.
பூணூல் என்பது தமிழகத்தில் ஏதோ ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் அணிவது அல்ல. இந்து தர்மத்தைக் கடைப்பிடிக்கக் கூடிய எல்லா சமூகத்தினரும் சமய சடங்குகளில் அணிவதுதான். எனவே இது இந்து மதத்தை பின்பற்றுபவர்களுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சவால் ஆகும்.இன்று பூணூலை அறுத்ததைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் நாளை வேறொருவனுடைய ருத்ராட்சத்தை அறுப்பார்கள், நெற்றியில் விபூதியை, திருமண்ணை அழிப்பார்கள். மஞ்சள், சிவப்பு புடவை கட்டி விரதம் இருக்கும் பெண்களை வம்புக்கிழுப்பார்கள். இப்படி இந்து தர்மத்துக்கு எதிரான விஷம காரியங்களை தொடர்ந்து செய்யும் ஆபத்து தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய அநாகரிகமான, அருவருக்கத்தக்க போக்கு தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பெருகி வருவதை பார்க்கிறோம். இதனை முளையிலேயே கிள்ளியேறிய வேண்டியது அவசியம். இந்து சமுதாயத்தின் எந்த ஒரு சமூகம் பாதிக்கப்பட்டாலும் இந்து முன்னணி நீதி, நியாயம் கேட்டு போராட தயங்காது. எனவே, காவல்துறை இத்தகைய பிரச்சினையில் யாருடைய நிர்பந்தத்துக்கும் அடிபணியாமல் சட்டப்படி உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென இந்து முன்னணி வலியுறுத்துகிறது.” என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.