தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும், கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் முழுமையாக மாற்றப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு மாதம் ஒருமுறை சென்று, மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை கண்காணிக்கவும், அரசின் பல்வேறு திட்டப்பணிகளை கண்காணிக்கவும் அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகளாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 2019 டிசம்பர் 3-ம் தேதி, இந்தாண்டு ஜூலை 31-ம் தேதியில் வெளியிடப்பட்ட அரசாணைகளின் மூலம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், அந்த அதிகாரிகள் அனைவரையும் மாற்றிவிட்டு, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையால் அவ்வப்போது வழங்கப்படும் உத்தரவுகளை செயல்படுத்தும் வகையில், புதிய கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு மாதம் ஒருமுறை சென்று, மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணைப்படி, அரியலூர் மாவட்டத்துக்கு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் எம்.விஜயலட்சுமி, செங்கல்பட்டு- சுற்றுச்சூழல் துறை இயக்குநர் ஏ.ஆர்.ராகுல்நாத், கோயம்புத்தூர்- ஆதிதிராவிடர் நல இயக்குநர் டி.ஆனந்த், கடலூர்- உணவுப்பொருள் வழங்கல் இயக்குநர் டி.மோகன், சென்னை- இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், தருமபுரி- தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குநர் எஸ்.திவ்யதர்ஷினி, திண்டுக்கல்- தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக மேலாண் இயக்குநர் எஸ்.அனீ்ஷ் சேகர், ஈரோடு- பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் டி.என்.வெங்கடேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சிக்கு நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் பி.மதுசுதன் ரெட்டி, காஞ்சிபுரம்- தாட்கோ மேலாண் இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி, கன்னியாகுமரி- புதிய திருப்பூர் பகுதி வளர்ச்சிக்கழக மேலாண் இயக்குநர் ஹனிஷ் சப்ரா, கரூர்- பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கிருஷ்ணகிரி- தேசிய சுகாதார திட்ட இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், மதுரை- தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் ஏ.அருண் தம்புராஜ், மயிலாடுதுறை- அருங்காட்சியக இயக்குநர் கவிதா ராமு, நாகப்பட்டினம்- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண் இயக்குநர் ஏ.அண்ணாதுரை, நாமக்கல்- சிறுபான்மையின நல இயக்குநர் எம்.ஆசியா மரியம், பெரம்பலூர்- மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் எம்.லட்சுமி, புதுக்கோட்டை- வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் இ.சுந்தரவள்ளி, ராமநாதபுரம்- தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத்தலைவர் எம்.வள்ளலார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர, ராணிப்பேட்டை- தொழில்துறை சிறப்புச் செயலர் மரியம் பல்லவி பல்தேவ், சேலம்- சுற்றுலாத்துறை ஆணையர் சி.சமயமூர்த்தி, சிவகங்கை- மீன்வளத்துறை இயக்குநர் ஆர்.கஜலட்சுமி, தென்காசி- தமிழ்நாடு பாடநூல்கழக மேலாண் இயக்குநர் பி.சங்கர், தஞ்சாவூர்- தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழக மேலாண் இயக்குநர் எம்.அரவிந்த், நீலகிரி- ஆவின் மேலாண் இயக்குநர் எஸ்.வினீத், தேனி- போக்குவரத்துத்துறை சிறப்புச் செயலர் ஆர்.லில்லி, தூத்துக்குடி- வேளாண் விற்பனை துறை ஆணையர் ஜி.பிரகாஷ், திருச்சிராப்பள்ளி- தொழில் வழிகாட்டி நிறுவன மோலண் இயக்குநர் வி.விஷ்ணு, திருநெல்வேலி- டிட்கோ மேலாண் இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், திருப்பத்தூர்- ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் எம்.ஆர்த்தி, திருப்பூர்- தொழில் மற்றும் வர்த்தக இயக்குநர் எல்.நிர்மல்ராஜ், திருவள்ளூர்- சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, திருவண்ணாமலை- கோஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநர் தீபக் ஜேக்கப், திருவாரூர்- கூட்டுறவு சங்கங்கள் கூடுதல் பதிவாளர் – பி.காயத்ரி கிருஷ்ணன், வேலூர்- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குநர் கே.விஜயகார்த்திகேயன், விழுப்புரம்- போக்குவரத்து ஆணையர் சுஞ்சோங்கம் ஜடக் சிரு, விருதுநகர்- கைத்தறி ஆணையர் ஏ.சண்முக சுந்தரம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.