புதுச்சேரியில் டெங்கு, சிக்குன்குனியா அதிகரிப்பு : அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

புதுச்சேரி : செப். 25, புதுச்சேரியில் அதிகரிக்கும் டெங்கு, சிக்குன்குனியாவால் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதற்குக் காரணம் சுகாதாரத் துறை அலட்சியமே என எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ள நிலையில், கொசு மருந்து தெளிக்கும் பணியே நடக்கவில்லை. இந்நிலையில் மாநிலத்தில் டெங்கு, சிக்குன்குனியாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “இன்று வரை புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் சிக்குன்குனியா நோயாலும் 200–க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதனால் நகரம் மற்றும் கிராமப் புறங்களில் உள்ள மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இது பொதுமக்கள் மத்தியில் பெருத்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சுகாதாரத் துறையின் அலட்சியமே டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவுவதற்கு காரணம். சுகாதாரத் துறை நோய் தடுப்பு நடவடிக்கையில் தொடர்ந்து கோட்டை விடுவதால் தான் நோய்கள் பெருகுகின்றன. நோய்த் தடுப்பு பணிக்காக பொது சுகாதாரம் என்ற பிரிவு துணை இயக்குநரின் கீழ் செயல்பட்டு வருகிறது. அதில் தொழில்நுட்ப உதவியாளர், சுகாதார ஆய்வாளர், சுகாதார உதவியாளர், கொசு மருந்து தெளிப்பவர் உள்ளிட்ட பலரும் பணியில் இருக்கிறார்கள்.

இவர்கள் களத்தில் இறங்கி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது என நோய்த் தடுப்புப் பணிகளில் ஈடுபடுவர். இதனால் நோய் பரவுதல் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால், இப்போது அத்துறையின் செயல்பாடு முழுமையாக நிறுத்தப் பட்டிருப்பதை அறிகிறோம். எந்த சுகாதார ஊழியரும் மக்களை சந்தித்து பணி செய்வதை எங்கேயும் பார்க்க முடியவில்லை. இதனால் தான் கொசு மருந்து தெளிக்கும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் சுகாதாரத் துறை முழு கவனத்துடன் செயல்பட்டால் தான் நோய்கள் பரவாமல் தடுக்க முடியும்.

சுகாதாரத் துறை இயக்குநராக இருந்த ஸ்ரீராமுலுவின் பதவிக் காலம் முடிந்து பல மாதங்கள் ஆன நிலையில் இன்னும் அத்துறைக்கு முழுநேர இயக்குநர் நியமிக்கவில்லை. அரசின் முக்கிய துறை, முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சுகாதாரத் துறைக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டு இருப்பது துரதிர்ஷ்டவசமானது. முதல்வர் அனைத்திற்கும் மவுனம் காப்பதுபோன்று இதிலும் இல்லாமல் சுகாதாரத் துறைக்கு உடனடியாக தகுதியான இயக்குநரை நியமித்து, நிர்வாகத்தை முறைப்படுத்த வேண்டும். மருத்துவ முகாம்கள் அமைத்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்களிலும் சேர்த்து 14 ஆம்புலன்ஸ் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. 13 ஆண்டுகளை கடந்தும் மிகவும் பரிதாபமான நிலையில் ஓடிக்கொண்டிருக்கும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை பராமரிக்கவும், புதிய வாகனங்கள் வாங்கவும் சுகாதாரத்துறை முயற்சிக்கவில்லை.” என்று எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றம் சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் இப்படி குற்றம்சாட்டி இருக்கும் நிலையில், புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.