திருப்பதி லட்டு விவகாரம் : ‘‘முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறி இருப்பது உண்மையல்ல’’ – பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் கடிதம்

திருப்பதி லட்டுகளில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பியதாக குற்றம்சாட்டி முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன், பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பொறுப்பற்ற மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட அறிக்கைகள் பக்தர்களின் நம்பிக்கைகளை காயப்படுத்தியிருப்பதுடன், திருப்பதி தேவஸ்தான போர்டின் புனிதத்தன்மையை குலைப்பதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெகன்மோதன் ரெட்டி தனது கடிதத்தில், “வெங்கடேச பெருமாளுக்கு இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகெங்கிலும் கோடிக்கணக்கான இந்து பக்தர்கள் உள்ளனர். இந்த சிக்கலான சூழ்நிலையை கவனமாக கையாளவில்லை என்றால், இந்தப் பொய்கள் பரந்த அளவிலான வேதனையைத் தூண்டும். பல்வேறு முனைகளில் இருந்து பல விளைவுகளை உருவாக்கும்.

இது உண்மையில் அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் பொய்யாகும். இந்த பொய்கள் உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் சாத்தியக்கூறுகள் உள்ளன. திருப்பதி தேவஸ்தானம் போர்டு என்பது பல்வேறு பின்னணியில் இருந்து புகழ்பெற்ற பக்தர்களை உள்ளடக்கிய ஒரு சுயாதீனமான அமைப்பு.

டிடிடி போர்டில் தற்போது உள்ள உறுப்பினர்களில் சிலர் பாஜகவையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டிடிடியின் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் அதிகாரம் அறங்காவலர் குழுவுக்கு உள்ளது. திருமலை வெங்கடேச கோயில் நிர்வாகத்தில் ஆந்திரப்பிரதேச அரசுக்கு சிறிய அளவிலான பங்கே உள்ளது.

கோயிலுக்கு வரும் நெய்யின் தரத்தை சோதனை செய்ய பல விரிவான சோதனைகள் நடைபெறுகின்றன. ஒரு பெருள் பயன்படுத்துவதற்கு முன்பு கடுமையான இ-டெண்டர் நடைமுறை, என்ஏபிஎல் அங்கீகாரம் பெற்ற ஆய்வகச் சோதனைகள் மேலும் பல கட்டச் சோதனைகள் உள்ளன. தெலுங்கு தேசம் கட்சியின் முந்தைய ஆட்சியிலும் இது போன்ற நடவடிக்கைகள் இருந்தன. நெய் தரமற்றதாக இருப்பதாக இப்போது கண்டறியப்பட்டிருப்பது போல, முந்தைய காலங்களில் டேங்கர்கள் நிராகரிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளன.

சந்திரபாபு நாயுடு பொய் பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். அரசியல் நோக்கங்களுக்காக தற்போது அவர், கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தும் அளவுக்கு தாழ்ந்துள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஒட்டுமொத்த நாடும் உங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறது.

பொய்களை பரப்பும் வெட்கமற்ற செயலுக்காக சந்திரபாபு நாயுடு கண்டிக்கப்படுவதுடன், உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வருவது மிகவும் அவசியமானதாகும். அது கோடிக்காணக்கான இந்து பக்தர்களின் மனதில் சந்திரபாபு நாயுடு ஏற்படுத்தியிருக்கும் சந்தேகங்களைப் போக்கவும், திருப்பதி தேவஸ்தான புனிதத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவும் உதவும்” என்று ஜெகன்மோகன் தெரிவித்துள்ளார்.