திருப்பதி லட்டு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஆந்திர முதலமைச்சரை தேவஸ்தான நிர்வாகிகள் இன்று சந்தித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதமும், அதன் தனித்தன்மையான சுவையும் புகழ்பெற்றது. 300 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்த லட்டு பிரசாதம், மிகவும் புனிதத்தன்மை வாய்ந்ததாக பக்தர்களால் போற்றப்படுகிறது.
இந்தநிலையில் திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரம் குறைந்துள்ளதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அதனை மத்திய அரசின் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி சோதனை செய்து பார்த்ததில், அந்த நெய்யில் மாட்டுக்கொழுப்பு, பன்றிக்கொழுப்பு இருப்பது தெரியவந்தது. இதனை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக தெரிவித்ததுடன், முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி அரசு மீது குற்றச்சாட்டையும் கூறினார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானமும் லட்டு பிரசாதத்தில் மாட்டுக்கொழுப்பு கலந்து இருப்பது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக விரிவான ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி ஆந்திர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. விலங்கு கொழுப்பு கலந்த நெய்யில் லட்டு தயாரித்ததால் கோவிலுக்கு மிகப்பெரிய பாவமும், தோஷமும் ஏற்பட்டதாக அர்ச்சகர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.
திருப்பதி லட்டு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை தேவஸ்தான நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்க நேரில் அழைப்பு விடுத்தனர். இந்த சந்திப்பின்போது கலப்பட நெய் விவகாரம் குறித்தும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் 4-ம் தேதி தொடங்கி 9 நாட்கள் திருப்பதி மலையில் ஏழுமலையானின் வருடாந்திர பிரமோற்சவம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.