அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வின்போது பக்தர்களுக்கு திருப்பதி லட்டு பிரசாதமாக விநியோகிக்கப்பட்டது என அக்கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார். இதற்காக, திருப்பதி கோயிலில் இருந்து வரவழைக்கப்பட்ட 300 கிலோ லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டது என அவர் கூறியுள்ளார்.
திருப்பதி லட்டுவில் விலங்குக் கொழுப்பு சேர்க்கப்பட்டது குறித்து கண்டனம் தெரிவித்த அவர் “திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குக் கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்தால் அது மன்னிக்க முடியாதது. சம்பந்தப்பட்டவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வைணவவர்கள், உணவில் பூண்டு, வெங்காயம் கூட பயன்படுத்துவதில்லை. அப்படியிருக்க விலங்குக் கொழுப்பை பிரசாதத்தில் சேர்த்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது இந்து மத நம்பிக்கையை கேலிக்கூத்தாக்குவதற்கு சமம். இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணை செய்ய உயர்மட்ட விசாரணைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும்.” என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். கடந்த ஜனவரி 22 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை வெகு விமரிசையாக நடந்தேறியது.
லட்டு சர்ச்சை பின்னணி: ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் நியமனம் செய்யப்பட்ட தேவஸ்தான அறங்காவலர் குழு, மிக குறைந்த விலைக்கு, அதாவது ஒரு கிலோ நெய் ரூ.320 முதல் ரூ.411 என்ற விலையில் 5 நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்துள்ளது. இதில் ஒரு நிறுவனமான திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு கடந்த 5 ஆண்டுகளாக நெய் அனுப்பி வந்துள்ளது.
இதனால், லட்டு தரம் மிகவும்குறைந்து போனது. இது குறித்து பக்தர்கள் தொடர்ந்து புகார் கூறிவந்தாலும், கடந்த ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஆந்திராவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆனார். இதைத் தொடர்ந்து, திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரம் குறித்த புகாரை அவரது பார்வைக்கு தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள் ராவ் கொண்டு சென்றுள்ளார். இதுகுறித்து பரிசோதனை செய்யுமாறு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்ட நிலையில், குஜராத்தில் உள்ள என்டிடிபி பரிசோதனை மையத்துக்கு கடந்த ஜூலை மாதத்தில் நெய் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆய்வு முடிவில், நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த நெய்யில் மீன் எண்ணெய், மாடு மற்றும் பன்றியின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரம் குறித்த விளக்க அறிக்கையை உடனடியாக வழங்க வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.