தமிழகத்தில் 7 அரசு சட்டக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக இருப்பதற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சகா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் சட்டப் படிப்புகள் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரி மற்றும் சட்டப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. நெல்லை, மதுரை, ராமநாதபுரம், திருச்சி, தேனி, காரைக்குடி சட்டக் கல்லூரிகளில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே நிரந்தர விரிவுரையாளர்கள் உள்ளனர்.
பல சட்டக் கல்லூரிகளில் நிரந்தர, பகுதிநேர விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் சட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் முழுமையாக பாடங்களை கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மதுரை, தேனி, காரைக்குடி, நெல்லை, ராமநாதபுரம், திருச்சி அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள நிரந்தர மற்றும் பகுதி நேர விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல். விக்டோரியா கவுரி அமர்வு இன்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள், “தமிழகத்தில் 7 அரசு சட்டக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் காலியாக உள்ளது. அரசு சட்டக் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தாவிட்டால், சட்டக் கல்லூரிகளை மூடிவிடலாமே? தமிழகத்தில் எத்தனை சட்டக்கல்லூரிகள் உள்ளன? அதில் எத்தனை விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர்? எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர்? சட்டக்கல்லூரிகளில் பின்பற்றப்படும் மாணவர்கள் – பேராசிரியர்கள் விகிதம் என்ன?
சட்டக் கல்லூரிகளில் எத்தனை ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்கள் உள்ளன? அதில் எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளது? சட்டக் கல்லூரி காலிப்பணியிடங்களை நிரப்ப எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை அக். 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.