வழக்கு விசாரணையின் போது, பெண் வழக்கறிஞர் ஒருவருக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் தெரிவித்த ஆட்சேபனைக்குரிய, சர்ச்சையான கருத்து குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான மூத்த நீதிபதிகள் 5 பேர் அடங்கிய அமர்வு, வழக்கு விசாரணையின் போது கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாசசார் ஸ்ரீஷானந்தா கூறிய கருத்துக்களைத் தெரிந்து கொள்வதற்காக இன்று காலை கூடியது. மேலும் இந்த அமர்வு சம்மந்தப்பட்ட நீதிபதியின் கருத்துக்கள் குறித்து உயர் நீதிமன்றத்திடம் அறிக்கை கேட்டுள்ளது.
இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் கூறுகையில், “கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது நீதிபதி தெரிவித்த கருத்துகள் ஊடக செய்திகள் மூலம் கவனம் பெற்றுள்ளது. இதுகுறித்து உயர் நீதின்ற நீதிபதியிடம் உத்தரவு பெற்று அறிக்கை சமர்ப்பிக்கும் படி உயர் நீதிமன்றத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.
ஐந்து பேர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய், சூரிய காந்த் மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் ‘நாங்கள் சில வழிகாட்டுதல்களை வழங்கலாம்’ என்று தெரிவித்திருந்தனர்.
மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், அறிக்கை உச்ச நீதிமன்ற செயலாளரிடம் தாக்கல் செய்யப்படும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார். இந்த மனு மீதான விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நிலத்தின் உரிமையாளர் – குத்தகைதாரர் தொடர்பான வழக்கு விசாரணையின் போது உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியை பாகிஸ்தான் என்று அழைத்திருந்தார். மேலும் பெண் வழக்கறிஞர் ஒருவருக்கு எதிராக பெண் வெறுப்பு கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார் .இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.