மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்துக்காக ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சாடியுள்ள மம்தா பானர்ஜி, ஜார்க்கண்டை காப்பாற்ற தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன் அணையில் இருந்து மே.வங்கத்துக்குள் தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக குற்றஞ்சாட்டினார். மேலும் ஜார்க்கண்ட் ஒட்டிய எல்லைகளை மூன்று நாட்களுக்கு மூடவும் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட வெள்ளத்துக்காக தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனை (டிவிசி) சாடிய அவர், அதனுடனான மாநிலத்தின் அனைத்து உறவுகளையும் நிறுத்தப்போவதாக தெரிவித்தார். வெள்ள நிலவரங்களை பார்வையிட புர்பா மேதினிபூர் மாவட்டத்தின் பன்ஸ்குரா மற்றும் ஹவுரா மாவட்டத்தின் உதய்நாராயண்பூருக்கு அவர் சென்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது மழை நீர் இல்லை. ஜார்க்கண்ட் அரசு நிறுவனமான தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன் அதன் அணையில் இருந்து திறந்து விட்ட தண்ணீர். இது மனிதனால் உருவாக்கப்பட்ட வெள்ளம். இது துரதிர்ஷ்டவசமானது. நீர் கொள்ளளவு 36 சதவீதம் குறைந்துள்ள டிவிசி அணைகளை மத்திய அரசு ஏன் இன்னும் தூர்வாரவில்லை?. இந்தச் செயல்பாடுகளில் மிகப்பெரிய சதி உள்ளது. இது தொடரக்கூடாது. இதற்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க இருக்கிறோம்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைக் காப்பாற்ற தாமோதர் பள்ளத்தாக்கு அணைகளில் இருந்து தங்குதடையின்றி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இனி டிவிசியுடன் எந்த தொடர்பையும் வைத்துக்கொள்ள மாட்டோம்.
இதற்கு முன்பு இப்படி நடந்தது இல்லை. நான் பார்த்த விஷயங்கள் என்னுள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. அவ்வப்போது நாங்கள் கூட்டங்கள் நடத்துகிறோம். டிவிசி தலைவரை நான் நேரடியாக தொடர்பு கொண்டு அதிக அளவில் தண்ணீர் திறந்து விட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன். நேபாளம் மற்றும் பூடானில் இருந்து வரும் நீரால் மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியில் வெள்ளம் ஏற்படுகிறது. தெற்குப் பகுதியில் அது குறிப்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து வரும் தண்ணீரால் ஏற்படுகிறது.
இந்தாண்டு டிவிசி 5.5 லட்சம் கனஅடி தண்ணீரைத் திறந்து விட்டுள்ளது, அதனால் மேற்கு வங்கத்தில் வெள்ளம் ஏற்பட்டது. மேற்கு வங்கத்தில் 4-5 நாட்கள் மழை பெய்தது, என்றாலும் அதனை எங்களால் கையாண்டிருக்க முடியும் எங்களிடம் போதுமான உள்கட்டமைப்பு வசதி இருந்தது.” என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.