ஆட்டோ தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பேட்டரி இருசக்கர வாகனங்களை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமியிடம் புதுச்சேரி அதிமுக வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் முதல்வர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மாநிலத்தில் நகரப் பகுதியில் மட்டும் சுமார் 5000-க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் தங்களது சுய முதலீட்டில் சுற்றுலா பயணிகளையும், உள்ளூர் மக்களையும் நம்பி சுய தொழில் புரிந்து வருகின்றனர்.
இவர்களது வாழ்வாதார உரிமையை சீரழிக்கும் விதத்தில் கடந்த காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியின் போது இருசக்கர வாகனங்கள் அப்போதைய ஆட்சியாளர்களுக்கு வேண்டிய நபர்கள் மூலம் எவ்வித அனுமதியுமின்றி வாடகைக்கு விடப்பட்டன. இவை அனைத்தும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து வாடகைக்கு விடப்பட்டதால் ஆட்டோ தொழில்புரியும் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்த இருசக்கர வாகனங்கள் நகரப்பகுதியில் உள்ள பிரதான சாலையோர நடை பாதைகளை ஆக்கிரமித்து நிறுத்தி வைத்து வாடகைக்கு விடப்படுகிறது.
இவ்வாறு வாடகைக்கு விடப்படும் இருசக்கர வாகனங்களை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஒட்டுமொத்த அனைத்து ஆட்டோ சங்க தொழிலாளர்களும் அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக புதுச்சேரி நகரப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து சுமார் 4000-க்கும் மேற்பட்ட பதிவு எண்கள் இல்லாத, பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் சுற்றுலாப் பயணிகள் கூடும் பேருந்து நிலையங்கள், திரையரங்குகள், ரயில் நிலையம், சுற்றுலாத் தலங்கள் ஆகிய பகுதிகளில் நிறுத்தப்பட்டு ஆன்லைன் புக்கிங் மூலமாக முன் பதிவு செய்து வாடகைக்கு விடப்படுகின்றன. இதனால் ஆட்டோ தொழிலில் ஈடுபட்டு வரும் ஆட்டோ தொழிலாளர்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
சுற்றுலா வளர்ச்சி என்பது அவசியமான ஒன்றாக இருந்தாலும், சுற்றுலாவை நம்பி கடந்த பல ஆண்டுகாலமாக தொழிலில் இருக்கும் ஆட்டோ தொழிலாளர்களை முழுமையாக பாதிப்புக்கு உள்ளாக்கும் இந்த பேட்டரி இருசக்கர வாகனத்தை உடனடியாக அரசு ரத்து செய்ய வேண்டும். பேட்டரி இருசக்கர வாகனங்கள் அரசின் போக்குவரத்து துறை, சுற்றுலாதுறை உள்ளிட்ட எந்த துறையிலும் அனுமதி பெறாமல் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒரு தனி நபரால் உள்ளூரில் உள்ள ஒரு சிலரின் துணையோடு இயக்கப்படுகின்றன.
எனவே, முதல்வர் இந்த பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனங்களால் பாதிக்கப்படும் ஆட்டோ தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி உடனிருந்தார்.