“புதிதாக கட்சி ஆரம்பித்திருக்கும் விஜய் கட்சி மாநாட்டுக்கு 33 நிபந்தனைகள் விதிக்கப்பட்டது போல் 31 ஆண்டுகாலம் ஆட்சி கட்டிலில் இருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தவும் மிக மோசமான நிபந்தனைகளை போலீஸார் விதித்திருப்பதாக,” முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் முன்பு இன்று விழுப்புரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், சாலைகள் சீரமைக்கப்படாததை கண்டித்தும், பாதாளச் சாக்கடை திட்டத்தை சரியாக நடைமுறைபடுத்த வலியுறுத்தியும் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் பேசியதாவது: பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், புதிதாக கட்சி ஆரம்பித்திருக்கும் விஜய் மாநாட்டுக்கு 33 நிபந்தனைகள் விதிக்கப்பட்டது போல் 31 ஆண்டுகாலம் ஆட்சி கட்டிலில் இருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தவும் மிக மோசமான நிபந்தனைகளை காவல்துறையினர் விதித்தது தவறான போக்காகும்.
திமுக ஆட்சியில் புதுப் புது நோய்கள் வருகிறது. அப்படி நோய் வருபவர்கள் அரசு மருத்துவமனைக்குச் சென்றால் மருத்துவர் இல்லை, மருந்து இல்லை, மாத்திரைகள் இல்லை. சாக்கடை நீர் சாலைகளில் ஆறு போல் வழிந்தோடுகிறது. விழுப்புரத்தில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இந்தப் பிரச்சினை உள்ளது.
கஞ்சா விற்பனைக்கும், சாராய விற்பனைக்கும் ஆதரவாக தெருவிளக்குகள் எரியாமல் விழுப்புரம் நகரம் இருளில் மூழ்கியுள்ளது. விழுப்புரத்தில் இடுகாட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுமென டெண்டர் விடப்பட்டுள்ள அதிகாரிகள் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை திமுகவின் ஊதுகுழலாக இருக்கக்கூடாது. தமிழகத்தில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. பெண்கள் கூட்டு பலாத்காரம் செய்யபடுகிறார்கள் என்று சி.வி.சண்முகம் பேசினார்.