“ஆயுதங்களைக் கீழே போடுங்கள், இல்லாவிட்டால் அரசின் நடவடிக்கைகளில் இருந்து தப்ப முடியாது” – நக்சல்களுக்கு அமித் ஷா எச்சரிக்கை

நக்சல்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பொது நீரோட்டத்தில் இணைய முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இல்லாவிட்டால் அரசின் நடவடிக்கைகளில் இருந்து தப்ப முடியாது என எச்சரித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை புதுடெல்லியில் இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வன்முறையைக் கைவிட்டு, ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு நக்சல்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். எனது இந்த வேண்டுகோளுக்கு நக்சல்கள் செவிசாய்க்கவில்லை என்றால், விரைவில் அவர்களுக்கு எதிராக முழு நடவடிக்கை எடுப்போம்.

வடகிழக்கு மற்றும் ஜம்மு காஷ்மீரில் பலர் துப்பாக்கிகளை கீழே போட்டுவிட்டு சரணடைந்து பிரதான நீரோட்டத்தில் இணைந்துள்ளனர். நீங்களும் இவ்வாறு இணைய வரவேற்கப்படுகிறீர்கள். ஆனால் அது நடக்கவில்லை என்றால், நக்சல்களை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் தொடங்குவோம். அது வெற்றியடைவதை உறுதி செய்வோம்.

நக்சலிசம் பரவலாகப் பரவிய ஒரு காலத்தில், அவர்கள் பசுபதி (நேபாளம்) முதல் திருப்பதி (ஆந்திரப் பிரதேசம்) வரை தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான கனவினைக் கண்டார்கள். தற்போது நக்சலிசம் சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் நான்கு மாவட்டங்களுக்குள் சுருக்கப்பட்டுள்ளது. மார்ச் 31, 2026-க்குள் சத்தீஸ்கரில் இடதுசாரி தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம்.

நாடு முழுவதும் சட்டத்தின் ஆட்சியை நிறுவுவது உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பு. நக்சலிசம் எந்த விதத்திலும் உள்நாட்டுப் பாதுகாப்போடு ஒத்துப்போகவில்லை. நக்சலிசத்தையும் அதன் சித்தாந்தத்தையும் நாட்டிலிருந்து வேரோடு பிடுங்கி எறிவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.

ஆயுதங்களுடன் சுற்றித் திரிபவர்களின் மனித உரிமைகள் குறித்து அக்கறைக் காட்டக்கூடிய மனித உரிமை ஆர்வலர்கள் பலர் டெல்லியில் இருக்கிறார்கள். ஆனால் இடதுசாரி தீவிரவாதத்தால் ஆதரவற்றவர்களாக மாறிய அல்லது ஊனமுற்ற குழந்தைகளைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. உங்கள் விஷயத்தில் அவர்கள் கண் இல்லாதவர்களைப் போலவும், வாய் பேச முடியாதவர்களைப் போலவும் நடிப்பார்கள்.

பிரதமரின் வீடு கட்டும் திட்டம், கழிவறைகள், வீடுகளுக்கு மின்மயமாக்கல் போன்ற சத்தீஸ்கர் அரசின் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இடது தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புதிய மறுவாழ்வுக் கொள்கை மூன்று மாதங்களில் வெளியிடப்படும்” என்று அமித் ஷா தெரிவித்தார்.