பிஹார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் பட்டியலின மக்களின் குடியிருப்புப் பகுதியில் 21 குடிசைகள் தீ வைத்து நாசமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக மாநிலத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தக் கொடூரச் சம்பவம், பிஹாரில் நடக்கும் காட்டு தர்பாருக்கு மற்றுமொரு சான்று என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
முஃபாசில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மஞ்ஹி தோலா பகுதியில் புதன்கிழமை இரவு நிகழ்த்தப்பட்ட இந்த தீவைப்பு சம்பவம், நிலத் தகராறு காரணமாக நடந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணைகளில் தெரிய வந்திருப்பதாக பிஹார் போலீஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து நவாடா மாவட்ட ஆட்சியர் அசுதோஷ் குமார் வர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், “வீடுகளுக்கு தீ வைத்து எரித்தது தொடர்பாக 15 பேரை மாவட்ட காவல் துறை கைது செய்துள்ளது. மீதமுள்ள சந்தேக நபர்களை தேடும் பணிகள் நடந்து வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
மஞ்ஹி தோலாவில் கும்பல் ஒன்றால் 21 வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. சில வீடுகள் பாதி எரிந்துள்ளன. எத்தனை வீடுகள் சேதமடைந்துள்ளன என்பது குறித்த சரியான தகவல்களுக்காக நிர்வாக மற்றும் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, தண்ணீர் உட்பட நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்காக தற்காலிக தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கால்நடைகள் எரிந்துவிட்டன என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை” என்று தெரிவித்தார்.
இந்தத் தீவைப்பு சம்பவம் தொடர்பாக நவாடா மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அபினவ் திமான் கூறுகையில், “மஞ்ஹி தோலாவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக இரவு 7 மணிக்கு போலீஸுக்கு அழைப்பு வந்தது. தீயணைப்பு வண்டிகளுடன் சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து சென்று தீயை அணைத்தனர். முதல்கட்ட விசாரணையில் நிலத் தகராறு காரணமாக இந்த தீவைப்பு சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது” என்றார். மற்றொரு போலீஸ் அதிகாரி ஒருவர், தீவைப்புச் சம்பவம் நடந்தபோது துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக தெரிவித்தார்.
நவாடா தீவைப்பு சம்பவம் குறித்து பிஹாரில் ஆளும் என்டிஏ கூட்டணியை கடுமையாக சாடியுள்ள காங்கிரஸ், மாநிலத்தின் காட்டு தர்பாருக்கு மற்றுமொரு சான்று என்றும், அங்கு பட்டியலின மக்களுக்கு எதிராக அநீதி நீடிக்கிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், “நவாடா மாவட்டத்தின் மகாதலித் காலனி முழுவதையும் எரித்து, 80-க்கும் அதிகமான குடும்பங்களின் வீடுகளை அழித்தது, பிஹாரில் பட்டியலின மக்களுக்கு எதிரான அநீதிகளின் சித்திரத்தை எடுத்துக் காட்டுகின்றன. வீடுகள், உடமைகளையும் இழந்த தலித் குடும்பங்களின் அழுகுரல்களும், கொடூரமான துப்பாக்கிச் சூட்டின் எதிரொலியால் ஒடுக்கப்பட்ட சமூகத்திடம் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சமும் உறங்கிக் கொண்டிருக்கும் பிஹார் அரசை தட்டி எழுப்பவில்லை.
இத்தகைய அராஜகத்தின் கூறுகள் எல்லாம் பாஜக தலைமை மற்றும் என்டிஏ கூட்டணி ஆட்சியின் கீழ்தான் நடக்கின்றன. அவர்கள் இந்தியாவின் பகுஜன்களை மிரட்டி ஒடுக்கப் பார்க்கிறார்கள். இதனால் அவர்கள் (தலித்துகள்) தங்களின் சமூக மற்றும் அரசியலமைப்பு உரிமைகளை கோர முடியாது. மேலும், பிரதமர் மோடியின் மவுனம் இந்த மிகப் பெரிய அநீதிக்கு ஒப்புதல் அளிப்பதுபோல உள்ளது. இந்த வெட்கக் கேடான குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளுக்கு எதிராக பிஹார் அரசும், காவல் துறையும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளித்து அவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “பிஹாரின் நவாடாவின் மகாதலித் தோலா மீது குண்டர்கள் நடத்திய பங்கரவாதம் என்டிஏ கூட்டணியின் காட்டு தர்பாருக்கு மற்றுமொரு சான்று. சுமார் 100 குடும்பங்களுக்கு தீவைக்கப்பட்டது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, தலித் குடும்பங்களின் அத்தனை உடமைகளும் இரவில் அழிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர் மீதான முற்றிலும் அலட்சியம், குற்றவியல் புறக்கணிப்பு மற்றும் சமூக அநீதி விஷயங்கள் தற்போது உச்சம் பெற்றுள்ளது. பிரதமர் மோடி வழக்கம்போல் ஊமையாக உள்ளார். ஆட்சியை காப்பாற்றும் நோக்கில் நிதிஷ் குமார் கண்டுகொள்ளாத நிலையில் இருக்கிறார், என்டிஏ கூட்டணி மவுனம் காக்கிறது” என்று சாடியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, “பிஹாரின் நவாடாவில் ஏழை தலித்துகளின் வீடுகளை குண்டர்கள் தீவைத்து அழித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது மிகவும் தீவிரமானது. குற்றவாளிகள் மீது மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வு பெறுவதற்கு முழு நிதியுதவி செய்யவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
பிஹாரின் முன்னாள் துணை முதல்வரும், ஆர்ஜேடி கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், “தலித்துக்களுக்கு எதிரான வன்முறையை பொறுத்துக்கொள்ள முடியாது. முதல்வர் தனது தூக்கத்தில் இருந்து எழுந்து மவுனத்தை கலைக்க வேண்டும். பிஹாரின் மூன்றாவது பெரிய கட்சியைச் சேர்ந்த முதல்வர் பேசுவதை நிறுத்தி பல மாதங்களாகி விட்டது. என்டிஏ கூட்டணிக்கு பிஹாரைப் பற்றி கவலை இல்லை. குற்றவாளிகளைப் பற்றிதான் கவலை” என்று சாடியுள்ளார்.