ஒரே நாடு ஒரே தேர்தலில் உள்ள சிக்கல்களை, சந்தேகங்களை மத்திய அரசு போக்க வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் கட்சிகளுக்கு வாக்களிப்பது பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் பல்வேறு விஷயங்கள் பற்றியும் பேசினார். பல்வேறு கோயில்களில் நியமிக்கப்பட்ட அனைத்து சாதி அர்ச்சகர்கள் அவமதிக்கப்படுவதும், அவர்களை தூய்மைபடுத்தும் பணியை மேற்கொள்ள வைப்பதும், அதை ஊக்குவிப்பதும் கண்டிக்கத்தக்கது. நியமிக்கப்பட்ட 24 அர்ச்சகர்களில் 10 அர்ச்சகர்களை அங்குள்ள பரம்பரை அர்ச்சகர்கள் அவமரியாதை செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதிகாரிகளும் பரம்பரை அர்ச்சர்களுடன் இணைந்து அவர்களை அவமானப்படுத்துவதாகக் கூறுகின்றனர்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டம் திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தை துவக்கிய முதல்வர் கருணாநிதி, “பெரியாரின் நெஞ்சில் தைக்கப்பட்ட முள் நீக்கப்பட்டது” என்றார். ஆனால், நடைமுறை வேறாக இருக்கிறது. இது குறித்த அர்ச்சகர்களின் புகார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இதற்கு காரணம் பரம்பரை அர்ச்சகர்களைக் கண்டு அஞ்சுவதுதான். இதன் மூலம் பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியுள்ளது திமுக அரசு என்று ராமதாஸ் கூறினார்.
2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்தப்படுமா என்ற கேள்விக்கு, “மத்திய உள்துறை அமைச்சர் இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடந்தால் வரவேற்கத்தக்கது.” என்றார். போதைப் பொருள் கடத்தல் குறித்து, “தமிழகத்தில் சராசரியாக வீட்டுக்கு ஒரு குடிகாரரை உருவாக்கிய நிலையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கமும் அதிகரித்துள்ளது. 1972-ம் ஆண்டுக்கு முந்தைய தலைமுறைக்கு மது என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தது. அடுத்து வந்த 52 ஆண்டுகளில் சில ஆண்டுகள் தவிர மற்ற ஆண்டுகளில் மது ஆறாக ஓடி 3 தலைமுறைகளை பாதித்துள்ளது.
கஞ்சா வணிகம் குறித்த அனைத்து உண்மைகளும் அரசுக்குத் தெரியும் என்றாலும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மக்களுக்கு செய்யும் துரோகமாகும். போதைப் பொருள் கடத்தலுக்கு 850 போலீஸ் அதிகாரிகள் உடந்தை என்ற செய்தி தவறு. காவல்துறையில் உள்ளவர்களில் 10 சதவீதம் பேரைத் தவிர அனைவரும் உடந்தை. இந்த அதிகாரிகளுக்கு இந்த உத்தியோகம் தேவையா?” என ராமதாஸ் வினவினார்.
“டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டித் தேர்வில் 6,244 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற நிலையில் 16 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். இந்த நிலையில் காலி பணியிடங்களை 480 உயர்த்தி இருப்பது போதுமானது இல்லை. தமிழகத்தில் 6 லட்சம் பணியிடங்களில் 2 லட்சம் பணியிடங்கள் குரூப் 4 வகையை சேர்ந்தவையாகும். எனவே குரூப் 4 பணியிடங்களை 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. புதிதாக 1 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் அவர்களுக்கு அத்தொகை வழங்கப்படவில்லை. இதை வழங்காமல் தாமதிப்பது நியாயமல்ல. மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்காக இதை நிறுத்தி வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் நகர்புறப்பகுதிகளில் சொத்து வரியை சதவீதம் உயர்த்த நகராட்சி நிர்வாகத்துறை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே 150 சதவீதம் சொத்துவரி உயர்த்தப்பட்டது. போதாதுக்கு, மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, சொத்துவரி உயர்த்தப்பட்டால் பாமக மாபெரும் போராட்டம் நடத்தும்.” என்றார்.
“ஒரே நாடு ஒரே தேர்தலில் உள்ள சிக்கல்களை, சந்தேகங்களை மத்திய அரசு போக்க வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் கட்சிகளுக்கு வாக்களிப்பது பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இது குறித்து பரிசீலிக்க வேண்டும்.” என்று ராமதாஸ் கூறினார்.
இறுதியாக, திண்டிவனம் பேருந்து நிலையத்திற்கு உத்தமர் ஓமந்தூரார் பெயரை வைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து கெளரவத்தலைவர் ஜி.கே.மணி கூறியது: தமிழகத்தில் மானாவரி பயிர் வறட்சியில் காய்ந்து வருகிறது. ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி 100 டிஎம்சி தண்ணீர் வீணாய் கடலில் கலந்தது. ஒரு சொட்டு தண்ணீர் வீணாகாமல் தடுப்பணை கட்டவேண்டும் என்று கூறினார்.
பேட்டியின்போது வன்னியர் சங்கத்தலைவர் பு.தா.அருள்மொழி, பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.