சென்னையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கல், மணல் குவாரிகளுக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தை கண்டித்து சென்னையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கல், மணல், கிராணைட் குவாரிகளுக்கு சட்டவிரோதமாக சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தை (சியா) கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு ஆர்ப்பாட்டம் சென்னை சைதாப்பேட்டையில் இன்று நடைபெற்றது. சங்கத்தின் நிறுவனர் ஈசன் தலைமை வகித்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து ஈசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் செயல்படும் கல்குவாரிகள், மணல் குவாரிகள், சுண்ணாம்பு குவாரிகள் போன்ற பெருந்தொழில்கள் அனைத்துக்கும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் என்ற அமைப்புதான் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குகிறது. அவ்வாறு அனுமதி கொடுக்கும்போது பொதுகருத்துக்கேட்பு கூட்டத்தையும் அந்த அமைப்பு நடத்துகிறது.

இந்நிலையில், அந்தக் கருத்துக் கேட்பு கூட்டங்களில் பங்கேற்று, குவாரிகளில் பல்வேறு சட்ட விதிகள் மீறப்படுவதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி வருகிறோம். ஆனாலும் சட்டங்களையும் விதிகளையும் மீறி, சுற்றுச்சூழலை புறந்தள்ளி, தொடர்ந்து சட்டவிரோதமாக செயல்படும் தொழிற்சாலைகளுக்கும், குவாரிகளுக்கும் அனுமதி அளித்து வருகின்றனர்.

இன்றைக்கு காலநிலை மாற்றம் என்பது விவசாயிகளை கடுமையாக பாதித்து இருக்கிறது. இதற்கெல்லாம் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது தான் முக்கிய காரணம். அதற்கு இந்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையமும் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றுகிறது. கோடிகளில் லஞ்சம் பெற்றுக்கொண்டு சுற்றுச்சூழல் அனுமதியை கொடுத்து, தமிழகத்தை பாலைவனமாக மாற்றி வருகின்றனர்.

இப்படிப்பட்ட மோசடியான ஆணையத்தை கலைத்துவிட்டு, லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, சட்டத்தின் படி முறையாக இயங்குபவர்களை தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தில் நியமிக்க வேண்டும். தமிழக அரசு இதுபோன்ற ஊழல் அமைப்புகளை கலைத்திட வேண்டும் என்று கூறினார்.