கடந்த 2021-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மீது மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுத்திருந்தால் என் மகள் உயிரோடு இருந்திருப்பார் என்று கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மருத்துவரின் தந்தை தெரிவித்துள்ளார். இந்த கொடூர கொலைக்கு நீதி கேட்டு போராடும் இளநிலை மருத்துவர்களை அவர், தனது குழந்தைகள் என்று அழைத்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட தந்தை கூறுகையில், “மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) அதன் பணியைச் செய்கிறது. அதுபற்றி (விசாரணை) நாங்கள் எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியாது. இந்தக் கொலையில் ஏதோ ஒருவகையில் தொடர்புடையவர்களோ அல்லது சாட்சிகளை அழிக்க முயற்சி செய்தவர்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.
இளநிலை மருத்துவர்கள் வலியுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் எனது குழந்தைகளைப் போன்றவர்கள். அவர்களைப் பார்க்கும் போது வலியை உணர்கிறோம். குற்றவாளிகள் தண்டிக்கப்படும் நாள் நாங்கள் வெற்றி பெற்ற நாளாக இருக்கும்.
கடந்த 2021ம் ஆண்டு முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அப்போதே முதல்வர் மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று என் மகள் உயிரோடு இருந்திருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துமனையில் உள்ள கருத்தரங்க கூட அரங்கில் ஆக.9-ம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். பிரேதப் பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரது பிறப்பு உறுப்பு, வயிறு, வலது தொடை, கழுத்து, வலது கை, உதட்டில் காயங்கள் இருந்தன. கழுத்து எலும்பு முறிந்திருந்தது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட விசாரணை நடந்து வருகிறது. முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு உறவினர். அவர் வேண்டுமென்றே வழக்குப் பதிவு செய்வதை தாமதப்படுத்தினார். இந்தக் கொலையை தற்கொலை என மாற்ற முடிவு செய்யதாகவும் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் கூற்றுப்படி, சந்தீப் கோஷீன் உத்தரவு படி, மருத்துவமனை அதிகாரிகள் தங்கள் மகளின் உடலைப் பார்க்க மூன்று மணிநேரம் காக்க வைத்தனர் என்று தெரிவித்தனர். குற்றம் நடந்தது கண்டறியப்பட்டு 14 மணிநேரங்களுக்கு பின்பே அதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சந்தீப் கோஷ் மீது, மருத்துமனையில் உரிமை கோரப்படாத உடல்களை விற்பனை செய்தது உட்பட பல ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.