மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ராகுல் காந்திக்கு பாஜக பிரமுகர் ஒருவரும் மகாராஷ்டிராவின் ஆளும் ஷிண்டே சேனா கட்சியின் எம்எல்ஏ ஒருவரும் மிரட்டல் விடுத்ததை சுட்டிக் காட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
அண்மையில் அமெரிக்கா சென்ற ராகுல் காந்தி கூறிய கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்த பாஜக பிரமுகர் தர்வீந்தர் சிங், “ராகுல் காந்தி, இதுபோன்ற செயல்களில் இருந்து விலகி இருங்கள், இல்லையெனில் வரும் காலத்தில் உங்கள் பாட்டிக்கு ஏற்பட்ட கதியை நீங்களும் சந்திக்க நேரிடும்” எனக் கூறியிருந்தார்.
அதேபோல் மகாராஷ்டிராவில் ஆளும் ஷிண்டே சேனா கட்சியின் எம்எல்ஏ ஒருவர், ‘ராகுல் காந்தியின் நாக்கை துண்டித்து வருபவருக்கு சன்மானம்’ என்று அறிவித்ததோடு பல்வேறு அருவருக்கத்தக்க விமர்சனங்களையும் அச்சுறுத்தல்களையும் முன்வைத்திருந்தார்.
இவற்றைச் சுட்டிக் காட்டியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “பாஜக தலைவர் ஒருவர் “ராகுல் காந்தி அவர்களின் பாட்டிக்கு நேர்ந்த கதிதான் அவருக்கும் நேரும்” எனவும், ஷிண்டே சேனாவின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் “ராகுல் காந்தி அவர்களின் நாக்கை அறுப்பவருக்குப் பரிசு” எனவும், இன்ன பிற வகைகளிலும் மிரட்டல் விடுத்திருப்பதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.
எனது சகோதரர் ராகுல் காந்தி அவர்களை நோக்கி மக்கள் ஈர்க்கப்படுவதும், நாளுக்கு நாள் அவருக்குக் கூடி வரும் பொதுமக்களின் ஆதரவும் பலரையும் மிரளச் செய்துள்ளதன் தொடர்ச்சியாகவே இத்தகைய அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, அச்சுறுத்தலுக்கும் வன்முறைக்கும் நமது மக்களாட்சியில் இடமில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.