“மதுவை ஒழிக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களை அழைத்துச் சென்று மது ஒழிப்பு மாநாடு நடத்துவது வேடிக்கையாக இருக்கிறது” என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்
இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பொய் வாக்குறுதிகளை கூறி திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. இந்தியாவிலேயே வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதல் அரசாக திமுக அரசு உள்ளது. வாக்கு வங்கி அரசியலுக்காக திமுக தொடர்ந்து செயல்படுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். மதுவை ஒழிக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களை அழைத்துச் சென்று மது ஒழிப்பு மாநாடு நடத்துவது என்பது வேடிக்கையாகவும், புதிராகவும் உள்ளது. இதற்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் ஆக்கபூர்வமானதாக இல்லை. தெலங்கானா உள்ளிட்ட சில மாநில முதல்வர்கள் அதிக முதலீடுகளை ஈர்க்கும் போது இங்கு ஏன் தொய்வு உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என தற்போது அனைவரும் நினைக்கிறார்கள். கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்புக்கள் அதிகரித்து வருகிறது. அனைத்துக் கட்சி மற்றும் அரசியல் தலைவர்களின் செயல்பாடுகளை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.
தங்களின் நம்பிக்கை பெற்று வரும் நபர்களுக்கு மட்டுமே அவர்கள் வாக்களிப்பார்கள். தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதற்கு இதுதான் சரியான தருணம். அரசு இதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு கேள்விக் குறியாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை அதிகரித்து வருகிறது. அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து இருக்கிறார்கள் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.