புதுச்சேரி முழு அடைப்பில் சாலைமறியல் : இந்தியா கூட்டணி கட்சியினர் நூற்றுக்கணக்கில் கைது 

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று நடந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அப்போது அரசுப் பேருந்து மீது கல் வீசப்பட்டதில் பேருந்தின் கண்ணாடி சேதம் அடைந்தது.

புதுச்சேரியில், உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும், ப்ரீபெய்டு மின் மீட்டர் திட்டம் மற்றும் மின் துறை தனியார் மையம் ஆவதை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

போராட்டத்தின் காரணமாக, ஆட்டோ, டெம்போக்கள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. நகரத்தின் முக்கிய வீதிகளில் உள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு உள்ளது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

முழு அடைப்புப் போராட்டம் முழு அளவில் நடைபெற்று வரும் நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் கடலூர் சாலையில் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சதுக்கம் அருகே நடைபெற்றது. திமுக மாநில அமைப்பாளர் சிவா, காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

புதுச்சேரி காங்கிரஸ் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், முன்னாள் எம்எல்ஏ-வான பாலன், திமுக சார்பில் எதிர்க்கட்சித்தலைவர் சிவா, எம்எல்ஏ-வான சம்பத், அவைத்தலைவர் எஸ்.பி.சிவகுமார், முன்னாள் எம்எல்ஏ-வான மூர்த்தி உள்ளிட்டோரும், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏ-வான கலைநாதன், சேதுசெல்வம் உள்ளிட்டோரும்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர் பெருமாள் உள்ளிட்டோரும், சிபிஐ (எம்எல்) மாநிலச் செயலர் புருஷோத்தமன், விசிக சார்பில் தமிழ்மாறன், அகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஜிகினி முகமது, மனித நேய மக்கள் கட்சி சகாபுதீன், ஆல்இந்தியா மஜ்லித் பார்ட்டி சம்ஸுதீன், மக்கள் நீதி மய்யம் சந்திரமோகன், ஆம் ஆத்மி சண்முகசுந்தரம் உள்ளிட்டோரும் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர்.

சாலை மறியல் போராட்டத்தின் போது அரசுப் பேருந்துகளை வழிமறித்து கண்டன கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள் சாலையில் படுத்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மறியல் போராட்டத்தின் காரணமாக அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் 500-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறுகையில், “முழு அடைப்புப் போராட்டத்துக்கு மக்கள் முழு ஆதரவு தந்துள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் பேசி அடுத்தகட்ட போராட்டத்தை இந்தியா கூட்டணி அறிவிக்கும்” என்றார். இந்நிலையில் கோரிமேட்டில் இருந்து புதுச்சேரி வந்த அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல் வீசியதில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதில் பயணிகள் இருவருக்கு காயம் ஏற்பட்டது.