ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி வேண்டி போராடி வரும் இளநிலை மருத்துவர்கள், மற்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இன்னும் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் குறித்து அரசுடன் கூடுதல் விவாதம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து மேற்குவங்க இளநிலை மருத்துவர்கள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “எங்கள் இயக்கத்தின் அழுத்தம் காரணமாக, காவல்துறை ஆணையர், இணை ஆணையர் வடக்கு, சுகாதாரச் சேவைகள் இயக்குநர் மற்றும் மருத்துவக்கல்வி இயக்குநரை நீக்கும் கட்டாயத்துக்கு அரசு தள்ளப்பட்டது. இது எங்களின் இயக்கத்துக்கு கிடைத்த ஒரு பகுதி வெற்றி. எங்களின் பிற கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை எங்களின் போராட்டம் தொடரும்.
சுகாதார சேவைகளை மேம்படுத்தாமல் மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிப்பது மட்டும் மருத்துவர்களின் பாதுகாப்பு சாத்தியமாகாது. மருத்துவமனைகளில் சுகாதார பணியாளர்கள் மற்றும் ஆலேசானை சேவைகளில் போதுமான அளவு ஆட்களைச் சேர்க்க வேண்டும். மருத்துவமனைகளில் படுக்கைகள் ஒதுக்கீட்டில் ஊழல், உயிர் காக்கும் மருந்துகளின் தட்டுப்பாடு போன்றவைகளால் சாதாரண மக்கள் அதிக அளவில் சிக்கலைச் சந்திக்கின்றனர். இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும்.
முதல்வருடனான சந்திப்பின் போது, இந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு காண கல்லூரி அளவிலான பணிக்குழுவை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் எவ்வாறு நிறைவேற்றப்பட இருக்கிறது என்பது குறித்த தெளிவு இல்லை.
மருத்துவக்கல்லூரிகள் மற்றும் ஜனநாயக மாணவர் பேரவைத் தேர்தல்களில் அரசியல் பயம் நீக்கப்பட வேண்டும். எங்களின் போராட்டக்களத்தில் இருந்து பேசிய முதல்வர், நோயாளிகள் நலக்குழுக்கள் கலைக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் எழுத்துப்பூர்வமாக எதுவும் வழங்கப்படவில்லை. மீண்டும் இந்தக் குழுக்கள் எவ்வாறு அமைக்கப்படும் என்பது பற்றிய தெளிவும் இல்லை. இவை அனைத்துக்கும் இன்னும் கூடுதல் பேச்சுவார்த்தை நடத்தப்பப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, போராட்டம் நடத்தும் இளநிலை மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப கொல்கத்தாவின் போலீஸ் கமிஷனராக இருந்த வினீத் குமார் கோயல் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதேபோல், சுகாதாரத்துறையில் இரண்டு அதிகாரிகளும் நீக்கம் செய்யப்பட்டனர்.
கடந்த திங்கள்கிழமை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், “இளநிலை மருத்துவர்களினஅ 99 சதவீத கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டோம். இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? . பொதுமக்கள் துயரப்படாத வகையில் மருத்துவர்கள் பணிக்கு திரும்புமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
போராட்டம் நடத்திய மருத்துவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. மருத்துவர்கள் பணிக்கு திரும்புமாறு நான் வேண்டிக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். என்றாலும், மருத்துவர்கள் தங்களின் பிற கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை தொடர்வோம் என்று தெரிவித்துள்ளனர்.