மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி நாளை புதுச்சேரியில் இந்தியா கூட்டணிக் கட்சியினர் முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், மாநிலத்தின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை உண்டாக்கும் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யக் கோரி காவல்துறையிடம் அதிமுக இன்று மனு அளித்துள்ளது. புதுவை மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் புதுவை எஸ்எஸ்பி-யான நாரா சைதன்யாவிடம் இன்று கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி நாளை புதன்கிழமை பந்த் போராட்டம் நடத்தப்படுவதாக இந்தியா கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பந்த் போராட்டம் சட்ட விரோதமானது என, உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் பலமுறை தீர்ப்பளித்துள்ளன.
பந்த் போராட்டத்தால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு சட்டப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை கைது செய்ய வேண்டும். கடந்த ஆண்டு அதிமுக சார்பில் மாநிலத்தின் பிரதான கோரிக்கையை முன்வைத்து கதவடைப்பு போராட்டம் நடத்தியபோது திமுக எம்எல்ஏ-க்கள் டிஜிபி-யை சந்தித்து அதிமுக தலைவர்களை கைது செய்ய வேண்டும் என கடிதம் அளித்தனர்.
அந்த கடிதத்தின் அடிப்படையில் அதிமுகவினரை காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு நேரத்தில் கைது செய்தனர். தற்போது பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கும் தலைவர்களையும், எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகளையும் இதுவரை காவல் துறை கைது செய்யாதது வியப்பாக இருக்கிறது.
மாநிலத்தின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் நோக்கத்தோடு நாளை நடத்தப்படும் பந்த் போராட்டத்தை முன்னிட்டு சம்பந்தப்பட்ட அனைவரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.