“ஜம்மு – காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதத்தை நிலைநாட்ட காங்கிரஸ் முயற்சி” – அமித் ஷா குற்றச்சாட்டு

ஜம்மு – காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதத்தை நிலைநாட்ட தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரஸும் முயல்கின்றன என்று மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பத்தர் நக்சேனி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர், “பிரிவினை காரணமாகவும், 1990 பயங்கரவாத நடவடிக்கை காரணமாகவும் அதிகம் பாதிக்கப்பட்ட பூமி ஜம்மு காஷ்மீர். ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதத்தை நிலைநாட்ட தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரஸும் முயற்சி செய்து வருகின்றன. 1990ஆம் ஆண்டு போலவே இன்றும் இங்கு பயங்கரவாதத்தை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரஸும் தங்கள் அரசு ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாதிகளை விடுவிப்போம் என்று வாக்குறுதிகளை அளித்துள்ளன.

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன், பயங்கரவாதம் ஒருபோதும் வெளியே வர முடியாத அளவுக்கு அதனை நாங்கள் ஆழமாக புதைப்போம். மோடி அரசின்கீழ், இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு இடம் இல்லை. பயங்கரவாதத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகள், தாங்கள் ஆட்சி அமைத்தால் 370 வது பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் என்று கூறி வருகின்றன.

370-வது சட்டப்பிரிவை திரும்ப கொண்டு வந்தால், குஜ்ஜர்கள் மற்றும் பஹாடிகளுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை அது பறித்துவிடும். பெண்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை அது முடிவுக்கு கொண்டுவந்துவிடும். குர்ஜர்கள், பஹாடிகள், தலித்துகள், ஓபிசிக்கள், பெண்கள் ஆகியோருக்கு இடஒதுக்கீடு உரிமைகளை வழங்க பிரமதர் மோடி விரும்புகிறார்.

பிரதமர் மோடியால் நீக்கப்பட்ட சட்டப்பிரிவு 370 தற்போது வரலாற்றின் பக்கமாக மாறியுள்ளது. இந்திய அரசியலமைப்பில் 370வது பிரிவுக்கு இனி இடமில்லை. இனி, நாட்டில் இரண்டு அரசியல் சாசனங்கள், இரண்டு பிரதமர்கள், இரண்டு தேசியக் கொடிகள் இருக்க முடியாது. ஒரே கொடி, நம் அன்பிற்குரிய மூவர்ண கொடி மட்டுமே நாடு முழுவதற்குமானதாக இருக்கும்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவி வந்த குடும்ப ஆட்சியை மோடி சிதைத்து விட்டார். பஞ்சாயத்துகளுக்கான தேர்தல்கள் மூலம், மிகவும் தகுதியான மக்களுக்கு அடிமட்ட அளவில் முடிவுகளை எடுக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் அவர்கள் (தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ்) ஜம்மு காஷ்மீரை பயங்கரவாதத்தால் நிரப்ப விரும்புகிறார்கள், மறுபுறம் பிரதமர் மோடி வளர்ந்த காஷ்மீரை உருவாக்க விரும்புகிறார்.

ஜம்மு காஷ்மீர் தேர்தல் இரு சக்திகளுக்கு இடையேயான போட்டியாக உள்ளது. ஒரு பக்கம் தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரஸும் உள்ளன. மற்றொரு பக்கம் பாஜக உள்ளது. தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி எப்போதும் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக உள்ளது. தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் அரசுகள் ஆட்சிக்கு வந்த போதெல்லாம் காஷ்மீரில் பயங்கரவாதம் வேகம் பெற்றுள்ளது” என்று அமித் ஷா தெரிவித்தார்.