சென்னையில் குரல்வலை பாதிப்பு அறுவை சிகிச்சை குறித்த பயிலரங்கம் நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதும் இருந்து வந்த மருத்துவர்களுக்கு குரல்வலை பாதிப்புக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சை குறித்து பயிற்றுவிக்கப்பட்டது.
சென்னை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லுரி மருத்துவமனை காது மூக்கு தொண்டை (இஎன்டி) துறை தலைவர் மருத்துவர் எம்.கே.ராஜேசாகர் ஏற்பாட்டில் “வாய்ஸ்கான்-3.0” என்ற தலைப்பில் போனோசர்ஜரி குறித்த தேசிய அளவிலான பயிலரங்கம் நடைபெற்றது.
கல்லூரி டீன் பி.சசிகுமார், கண்காணிப்பாளர் மனோகரன், குர்கானில் மெட்ன்டா மருத்துவமனை இஎன்டி துறை தலைவர் கே.கே.ஹண்டே மற்றும் ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்றனர்.
இந்த பயிலரங்கம் குறித்து மருத்துவர் எம்.கே.ராஜசேகர் கூறியதாவது: போனோசர்ஜரி என்பது குரல்வலை பாதிப்புக்கான அறுவை சிகிச்சை ஆகும். இரண்டு குரல்வலை உள்ளது. ஒரு குரல்வலையும், சில நேரங்களில் இரண்டு குரல்வலையும் பாதிக்கப்படும்.
குரல்வலை பாதிக்கப்பட்டால் பேசும் திறன் பாதிக்கப்படும். பக்கவாதம், கழுத்து பகுதியில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை, வைரஸ் தொற்று போன்றவற்றால் குரல்வலை பாதிக்கப்படலாம். காது மூக்கு தொண்டை சிகிச்சை பிரிவுக்கு சிகிச்சைக்கு வருபவர்களில் 5 சதவீதத்தினருக்கு குரல்வலை பாதிப்புள்ளது. மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதத்தினருக்கு குரல்வலை பாதிப்பு இருக்கிறது.
அதேபோல், குரல்வலை பாதிப்பில் மற்றொன்று என்னவென்றால் 14, 15 வயதில் குரல் மாற வேண்டும். ஆனால், சிலருக்கு குரல் மாறாமல் கீச்சுக்குரலாகவே இருக்கும். சரியான முறையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் குரல்வலை பாதிப்பை குணப்படுத்த முடியும். அதுகுறித்த பயிலரங்கம் நடைபெற்றது. இந்தியா முழுவதும் இருந்து வந்த மருத்துவர்களுக்கு குரல்வலை பாதிப்புக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சை குறித்து பயிற்றுவிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.