குரங்கு அம்மைக்கு சிகிச்சை தர புதுச்சேரியில் 10 படுக்கைகள் கொண்ட வார்டு அமைப்பு

குரங்கு அம்மைக்கு சிகிச்சை அளிக்க புதுச்சேரியில் கோரிமேடு மார்பக மருத்துவமனையில் பத்து படுக்கைகள் கொண்ட வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை தடுப்பு வழிமுறைகள், நெறிமுறைகளை வகுப்பது குறித்து சுகாதாரத் துறை இயக்குனர் (பொ) செவ்வேல் தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனைக் கூட்டம் புதுவை இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடந்தது. இதில் சுகாதாரத் துறை அதிகாரிகள், அரசு மார்பு நோய் மருத்துவமனை, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, ஜிப்மர் மருத்துவ கல்லூரிகளின் பிரிநிதிகள் கலந்து கொண்டனர்.

குரங்கு அம்மை குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குரங்கு அம்மை என்பது பெரியம்மை போன்ற அறிகுறிகளை கொண்ட வைரஸ் நோய். இந்த அம்மை நோயானது குறைவான மருத்துவ தீவிரத்துடன் காணப்படுகிறது. அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா நாடுகளில் மூன்று கண்டங்களில் குரங்கு அம்மை நோய் தொற்று உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் குரங்கு பாக்ஸ் வைரஸ் அறிகுறிகளோடு உள்ள ஒரு நபர் மட்டும் மருத்துவ பரிசோதனைக்கு உட்பட்ட பின் பாதிப்பு இல்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. புதுவையில் குரங்கு அம்மை நோயிலிருந்து பாதுகாத்து கொள்ள தேவையான அனைத்து முன் எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

குரங்கு அம்மைக்கு பாதிப்படைந்தவர்களை சிகிச்சை அளிக்க 10 படுக்கை கொண்ட வார்டு கோரிமேடு அரசு மார்பக மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ளது. அனைத்து டாக்டர்கள், செவிலியர்கள், கிராம செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மற்றும் அனைத்து முன்நிலை சுகாதார ஊழியர்கள் அனைவருக்கும் குரங்கு அம்மை பற்றிய தகவல் பகிரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.