சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் இடையே ரஷ்யாவில் நடந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான சூழ்நிலைகளை உருவாக்க இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான உயர்மட்டத் தலைவர்கள் சந்திப்பு ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்தது. இந்த பேச்சுவார்த்தையின் இடையே, வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ மற்றும் அஜித் டோவல் ஆகியோர் சந்தித்து, இரு நாடுகளின் எல்லைப் பிரச்னைகள் குறித்த சமீபத்திய ஆலோசனையில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து விவாதித்தனர்.
சீன-இந்திய மக்களின் நீண்டகால நலன்கள், பிராந்திய அமைதி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றுக்கு இரு நாடுகளின் உறவுகளில் ஸ்திரத்தன்மை முக்கியம் என இரு தரப்பு பிரதிநிதிகளும் நம்பிக்கை தெரிவித்தனர். இரு நாடுகளின் தலைவர்கள் எட்டிய ஒருமித்த கருத்தை செயல்படுத்தவும், பரஸ்பர புரிதல் மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தவும், தொடர் தொடர்புகளை பேணவும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கவும் சீனாவும் இந்தியாவும் ஒப்புக்கொண்டன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரான வாங் யீ, “கொந்தளிப்பான உலகில், கிழக்கின் இரண்டு பண்டைய நாகரிகங்களான சீனாவும் இந்தியாவும் சுதந்திரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும், ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சுயநோக்கத்துடன் ஒருவரையொருவர் பயன்படுத்திக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்” என்று சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்சுவா தெரிவித்துள்ளது.
இரு தரப்பினரும் தங்கள் வேறுபாடுகளை சரியாகக் கையாள்வார்கள் என்றும், இணைந்து பயணிப்பதற்கான சரியான வழியைக் கண்டுபிடிப்பார்கள் என்றும், ஆரோக்கியமான மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பாதையில் சீனா-இந்தியா உறவுகளை நிலைநிறுத்துவார்கள் என்றும் வாங் யீ நம்பிக்கை தெரிவித்ததாக ஜின்சுவா தெரிவித்துள்ளது.