சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பேச்சாளர் மகாவிஷ்ணுவை, போலீஸார் இன்று அவரது பரம்பொருள் அறக்கட்டளைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனரான பேச்சாளர் மகாவிஷ்ணு கலந்து கொண்டு மாணவியர் மத்தியில் பேசினார். அவரது பேச்சானது மாற்றுத்திறனாளிகளை காயப்படுத்தும் விதமாக இருந்தது. இதற்கு அந்த பள்ளியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் மகாவிஷ்ணு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து மகாவிஷ்ணுவுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இது தொடர்பாக மகாவிஷ்ணு மீது பலர் புகாரும் அளித்தனர். பல்வேறு புகார்கள் எழுந்ததை தொடர்ந்து மகாவிஷ்ணு மீது சைதாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே ஆஸ்திரேலியா சென்று திரும்பிய மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், மேல் விசாரணைக்காக 3 நாட்கள் காவலில் எடுத்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த குளத்துப்பாளையம் பகுதியில் மகாவிஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளை தலைமை அலுவலகம் உள்ளது. இதற்கு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவின் சிட்னி உள்ளிட்ட இடங்களில் கிளைகள் உள்ளன.
இந்த நிலையில், அவிநாசி குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை தலைமை அலுவலகத்தில் அறக்கட்டளைக்கான நன்கொடை விவரங்கள், என்னென்ன மாதிரியான பணிகளில் அறக்கட்டளை ஈடுபடுகிறது, எந்தெந்த பள்ளிகளில் மகாவிஷ்ணு சொற்பொழிவு ஆற்றியுள்ளார், என்னென்ன தலைப்புகளில் அவர் சொற்பொழிவு செய்து வருகிறார் என்பது உள்ளிட்ட தகவல்களை திரட்ட போலீஸார் திட்டமிட்டனர்.
இதற்காக மகாவிஷ்ணுவை திருப்பூர் குளத்துப்பாளையத்திற்கு சைதாப்பேட்டை போலீஸார் இன்று அழைத்து வந்தனர். தொடர்ந்து, பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்திற்கு அவரை அழைத்து வந்த போலீசார், அங்குவைத்து மகாவிஷ்ணுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை நடைபெற்று வருவதால் அறக்கட்டளை அலுவலகத்துக்குள் வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.