மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 72.
சீதாராம் யெச்சூரி ஆகஸ்ட் 19-ம் தேதி நிமோனியா போன்ற மார்புத் தொற்று சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கும், தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அண்மையில், அவர் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது. அவரை பல்துறை நிபுணர்கள் அடங்கிய மருத்துவர்கள் குழு கண்காணித்து வந்தது. சுவாசக் கருவிகளின் உதவியுடன் அவர் சுவாசித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் யெச்சூரி செயல்பட்டு வருகிறார். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அக்கட்சியின் பொதுச் செயலாளருக்கான தேர்தலில் வெற்றி பெற்று தற்போது மூன்றாவது முறையாக அந்த பொறுப்பை கவனித்து வந்தார்.
1996-ல் ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கான பொதுவான குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்குவதற்கு ப.சிதம்பரத்துடன் இணைந்து யெச்சூரி முக்கிய பங்களிப்பை வழங்கினார். 2004-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தை உருவாக்குவதிலும் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார். 1975-ல், ஜேஎன்யுவில் யெச்சூரி மாணவராக இருந்தபோது, அவசரநிலை காலத்தில் கைது செய்யப்பட்டார். 1977-78 இடையிலான ஓராண்டில் மூன்று முறை ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.