திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கேட்டர்பில்லர் நிறுவனத்தின் தற்போதுள்ள கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களை விரிவுபடுத்துவதற்கான ரூ.500 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தொழில் துறையைப் பொறுத்தவரையில், இந்திய அளவிலான கவனத்தை மட்டுமல்ல – உலக அளவிலான கவனத்தையும் தமிழ்நாடு பெற்று வருகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற இந்த மூன்று ஆண்டு காலத்தில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டு இருப்பதே இதற்கு சான்றாகும்.
தமிழ்நாட்டில் உயர்கல்விச் சேர்க்கை விகிதம் நாட்டின் சராசரியைவிட மிக அதிகமாக உள்ளதோடு, திறன்மிக்க பணியாளர்களையும் தமிழகம் பெற்றுள்ளது பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருவதற்கு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது. மேலும், தமிழ்நாடு அதிக முதலீடுகளை தொடர்ந்து ஈர்க்கின்ற வகையில், உலகத் தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகளுடன் துறை சார்ந்த தொழில் பூங்காக்களையும் அமைத்து வருகிறது.
2030-ம் ஆண்டில் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றிட வேண்டும் என்று உயரிய இலக்கை முதல்வர் ஸ்டாலின் நிர்ணயித்து அந்த இலக்கை அடைவதற்கான அனைத்து முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதல்வர் அமெரிக்காவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இப்பயணத்தின் போது முதல்வர் முன்னிலையில் அமெரிக்க நாட்டின் சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் முன்னணி நிறுவனங்களுடன் கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக சிகாகோவில் கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கேட்டர்பில்லர் நிறுவனம் கட்டுமானம் மற்றும் சுரங்கக் கருவிகள் ஆஃப்-ஹைவே டீசல் மற்றும் இயற்கை எரிவாயு இயந்திரங்கள் தொழில்துறை எரிவாயு விசையாழிகள் மற்றும் டீசல்-எலக்ட்ரிக் இன்ஜின்கள் ஆகியவற்றின் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாகும். இந்நிறுவனம் பார்ச்சூன் நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனத்தின் உலகளாவிய தலைமையகம் அமெரிக்கநாட்டின் டெக்சாஸில் உள்ள இர்விங்கில் அமைந்துள்ளது.
கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கேட்டர்பில்லர் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 500 கோடி ரூபாய் முதலீட்டில் திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தற்போதுள்ள கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களை விரிவுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் கேட்டர்பில்லர் நிறுவனத்தின் இயக்குநர் புவன் அனந்தகிருஷ்ணன் முதுநிலை துணைத்தலைவர் கெர்க்எப்லர் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.