பயிற்சி பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் நடந்த நிதிமோசடி வழக்கு தொடர்பாக அம்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்திப் கோஷுக்கு சொந்தமான இரண்டு வீடுகள் உட்பட நான்கு இடங்களில் அமலாக்கத் துறையினர் இன்று சோதனை நடத்தினர்.
நகரில் உள்ள லேக்டவுண் மற்றும் டாலா பகுதிகளில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்திய மற்ற இரண்டு இடங்கள் அமைந்திருந்தன. ஆர்.ஜி. கர் மருத்துவமனைக்கு மருந்துகள் வழங்கிய மருந்து விநியோக அலுவலகமும், மருந்து விநியோக வியாபாரியின் குடியிருப்பும் உள்ளன. மேற்குவங்கத்தின் ஹவுரா, சோனார்பூர் மற்றும் ஹுக்லி உள்ளிட்ட பல இடங்களில் நிதிமோசடி வழக்கு காரணமாக அமலாக்கத் துறையினர் சோதனை நடத்திய சில நாட்களுக்கு பின்னர் இந்தப் புதிய சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் நடந்ததாக கூறப்படும் நிதி முறைகேடுகளுக்கு எதிராக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. மத்திய புலனாய்வு முகமை பதிவு செய்த எஃப்ஐஆரின் அடிப்படியில் அமலாக்கத்துறை இந்த வழக்கினை பதிவு செய்துள்ளது. கொல்கத்தா மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை தொடர்பாக டாக்டர் சந்திப் கோஷீன் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது.
சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில், ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் நடந்த நிதி முறைகேடு தொடர்பாக ஊழல் தடுப்புச்சட்டம் பிரிவு 7 உட்பட, குற்றச்சதி, ஏமாற்றுதல் உள்ளிட்டவைகளின் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இந்த வழக்குகள் அடையாளம் காணக்கூடிய குற்றங்கள் மற்றும் ஜாமீனில் வெளியே வர முடியாதவையாகும்.
சந்திப் கோஷ் கடந்த 2021 பிப்ரவரி முதல் 2023 செப்டம்பர் வரை ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக பணியாற்றினார். பின்னர், 2023 அக்டோபரில் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஒருமாத காலத்துக்குள் மீண்டும் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு முதல்வராக திரும்பி வந்தார்.
மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நாள் வரை முதல்வராக இருந்தார். இதனிடையே, செப்டம்பர் 2ம் தேதி சந்தீப் கோஷை சிபிஐ கைது செய்தது. பின்பு அவர் சிபிஐ காவலுக்கு நீதிமன்றத்தால் அனுப்பப்பட்டார்.