ஹரியாணா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அம்மாநில பாஜகவின் துணைத் தலைவர் சந்தோஷ் யாதவ், கட்சியில் இருந்து விலகி உள்ளார். இது ஆளும் பாஜக தரப்புக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
கட்சிக்கு உண்மையாக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என அவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். மாநில தேர்தலை முன்னிட்டு பாஜக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியல் சந்தோஷ் யாதவ் அதிருப்திக்கு காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அடேலி பேரவை தொகுதியில் சந்தோஷ் யாதவ் போட்டியிட விரும்பியதாக தகவல். இருந்தும் பாஜக வெளியிட்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியலில் மத்திய அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங்கின் மகள் ஆர்த்தி சிங் ராவுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து மாநில கட்சி தலைமைக்கு சந்தோஷ் யாதவ் அனுப்பிய கடிதத்தில், “பாஜக கட்சிக்கு விசுவாசமாக உழைத்த தொண்டர்களை விட, உழைக்காதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. பாஜகவுக்காக நிஜமாகவே உழைக்கும் தொண்டர்கள் ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர். இந்த நிலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது கட்சியினர் மத்தியில் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் பரப்பி வருகிறது. கட்சியின் கொள்கையை தீவிரமாக பின்பற்றி, அனைத்து சூழலிலும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினேன்” என சந்தோஷ் யாதவ் கூறியுள்ளார்.
முன்னதாக, ஹரியாணா மாநில பாஜக துணைத் தலைவராக பணியாற்றிய ஜி.எல்.சர்மா, கட்சியில் இருந்து விலகி, தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் அண்மையில் இணைந்தார். அதே போல முன்னாள் மாநில அமைச்சர்கள் பச்சன் சிங் ஆர்யா, ரஞ்சித் சிங் சவுதாலா, பிஷாம்பர் சிங் வால்மீகி ஆகியோரும் கட்சியில் இருந்து விலகி உள்ளது குறிப்பிடத்தக்கது.