பாகிஸ்தானால் ஆதரிக்கப்படுபவரும், இந்தியாவுக்கு எதிரானவருமான இல்ஹான் உமருக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி செயல்படுவதாக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் அமித் மாள்வியா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் காங்கிரஸ் வெளிப்படையாகவே இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிறது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
அமெரிக்கப் பயணத்தின்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, வாஷிங்டனில் உள்ள ரேபர்ன் ஹவுஸ் அலுவலகத்தில் பிராட்லி ஜேம்ஸ் ஷெர்மன் தலைமையில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார். அதில் ஒருவர் தான் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இல்ஹான் உமர். இந்தியாவுக்கு எதிரான கருத்துகளால் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகுபவர் தான் இந்த இல்ஹான் உமர்.
இந்நிலையில் அவருடனான ராகுல் காந்தியின் சந்திப்பு குறித்து பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் அமித் மாள்வியா, விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாகிஸ்தான் ஆதரவாளரும், இந்தியாவுக்கு எதிரானவருமான, தீவிர இஸ்லாமியவாதி, காஷ்மீர் ஆதரவாளருமான இல்ஹான் உமரை அமெரிக்காவில் சந்தித்தார். சொல்லப்போனால் பாகிஸ்தான் தலைவர்கள் கூட இப்படியான சந்திப்பில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள். காங்கிரஸ் இப்போது வெளிப்படையாகவே இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிறது.” என குற்றம் சாட்டியுள்ளார்.