புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழா

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி தமிழாய்வுத் துறையும், புதுக்கோட்டை வாசகர் பேரவையும் இணைந்து நடத்திய வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் விழா, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில்,  முதல்வர் (பொறுப்பு) ச.ஞானஜோதி தலைமையில் நடைபெற்றது.

விழாவில் சிறப்புரை ஆற்றிய மா.மன்னர் கல்லூரி உடற்கல்வித்துறைத் தலைவர் முனைவர் அ.சி.நாகேஸ்வரன், “தேசியத்தையும், தமிழையும் நேசித்தவர் வ.உ.சிதம்பரனார்” என்றார். வீரபாண்டிய கட்டமொம்மன், பாரதியார் போன்றோர் பிறந்த வீரம் செறிந்த திருநெல்வேலி சீமையில் பிறந்தவர்தான் வ.உ.சிதம்பனாரும். வழக்கறிஞரான வ.உ.சி. மிகச்சிறந்த பேச்சாற்றல் மிக்கவர். ஆங்கிலேய அரசுக்கெதிராக சுதேசி கப்பல் கம்பெனியை நிறுவி, இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தை நடத்தியதற்காகவும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்களைத் தூண்டியதற்காகவும் கைது செய்யப்பட்டு இரண்டு தீவாந்திர (40 ஆண்டுகள்) சிறைத்தண்டனை பெற்றவர். பின்னர் அப்பிலில் 6 ஆண்டுகள் குறைக்கப்பட்டு கோவையிலும், கண்ணனூரிலும் கொடுஞ்சிறையில் வெந்தவர்.

செக்கிலுத்தல் போன்ற கொடுந்தண்டனைக்கு உள்ளானவர். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், மிக அதிகபட்ச தண்டனை பெற்றவரும், மிக மோசமான கொடுமைகளை அனுபவித்தவரும் வ.உ.சி.யே சிறையை தவ மையமாக கருதியதாக வ.உ.சி. குறிப்பிடுகிறார். காந்தி, நேரு போன்று இவரும் சிறைச்சாலையை புத்தகம் எழுத பயன்படுத்திக் கொண்டார். சிறையிலிருந்து வெளிவந்து வறிய நிலையில் இருந்த போதும் தமிழ்த் தொண்டை மறக்கவில்லை. கவிதை நடையில் அவரின் சுயசரிதம், அகமே புறம், வலிமைக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம் போன்ற ஜேம்ஸ் ஆலனின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள், திருக்குறள், தொல்காப்பியத்துக்கு உரைகள் என்று தமிழுக்கு அவர் வழங்கிய கொடை அளவிட முடியாதது.

எனவேதான் தேசத்தையும், தமிழையும் நேசித்தவர் என்கிறோம். வ.உ.சியின் புகழை முதலில் தமிழ் கூறும் நல்லுலகம் அறியச் செய்த பெருமை ம.பொ.சிவஞானத்தையே சாரும். வ.உ.சி. போற்றப் பட வேண்டிய சுதந்திரப் போராட்ட வீரர். பேச்சை ஒருகலையாக மாற்றியவர். அதன் மூலம் மக்களைத் தட்டி எழுப்பியவர். அவருடைய தியாகத்தை என்றென்றும் போற்றுவது நம் கடமை என்றார்.

உடன் பேசிய ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி, தமிழில் முதன் முதலில் மனைவியின் வாழ்க்கை சரிதத்தை எழுதியவர் வ.உ.சியே. அது வ.உ.சி.யின் முதல் மனைவி “வள்ளியம்மை சரிதம்” வாழ்ந்த காலம் கொஞ்சம் என்றாலும் வள்ளியம்மை வரலாற்றில் இடம்பிடித்து விட்டார். அதே போல “பால்ய விதவைகளுக்கு வாழ்வு கொடுங்கள்” என்று குரல் கொடுத்தவரும் அவரே ஆவர். அவளுடைய தேசப்பற்றும், மொழிப்பற்றும் என்றென்றும் போற்றப்பட வேண்டும் என்றார்.

முன்னதாக விழாவில் வாசகர் பேரவை செயலர் சா.விஸ்வநாதன் தனது அறிமுகவுரையில் விழாவின் நோக்கம் பற்றி எடுத்துக் கூறினார். தமிழாய்வுத் துறை இணைப்பேராசிரியர் வரவேற்புரையாற்ற, நிறைவாக தமிழ் உதவிப் பேராசிரியர் சி.தவமணி நன்றி கூறினார். விழாவில் புலவர் மதிவாணன், மருத்துவர் ராம்தாஸ், பேரா. டோரதி கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் கண்ணன் மற்றும் பேராசிரியர்கள் ஏராளமான மாணவிகள் விழாவில் பங்கேற்றனர். பல்வேறு நிலைகளில் சிறப்பு பெற்ற மாணவிகளுக்கு வாசகர் பேரவை சார்பில் நூல்கள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.