ஆறு வழிச் சாலையாக மாற்றப்படும் கிழக்கு கடற்கரைச் சாலை விரிவாக்கப் பணிக்கு மின் வடங்கள் மாற்றியமைத்தல், பாதாளச் சாக்கடை பணிகள் இடையூறாக இருப்பதால் பணிகளை விரைவாக முடிக்க துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார்.
கிழக்குக் கடற்கரைச் சாலையில், திருவான்மியூர் முதல் அக்கரை வரை உள்ள சாலைப்பகுதியை, 6 வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில், நிலஎடுப்பு, மின்சார வாரிய பயன்பாட்டுப் பொருட்களை மாற்றியமைத்தல், சென்னை குடிநீர் வாரிய குழாய்கள் பதிக்கும் பணி மற்றும் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்து, இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
அப்போது அமைச்சர், வருவாய்த்துறை, சென்னை குடிநீர் வாரியம், மின்சார வாரியம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் இப்பணிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். மேலும், வருவாய்த்துறை அலுவலர்களிடம், எந்தெந்த புல எண்களில் அவார்டு வழங்கப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா செய்யப்பட வேண்டிய புல எண்கள் ஆகியவற்றை கேட்டறிந்து, இப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
அப்போது அமைச்சர் வேலு பேசியதாவது: “சாலைப்பணி தொடர்பாக நிலுவையிலுள்ள நீதிமன்ற வழக்குகள், மேல்முறையீடுகள் போன்றவற்றை விரைந்து முடிக்க தனிக்கவனம் செலுத்த வேண்டும். கொட்டிவாக்கம் கிராமத்தில், 270 மீட்டர் நீளத்துக்கு குடிநீர் குழாய் மற்றும் பாதாளச் சாக்கடைப் பணிகள் நிலுவையில் உள்ளது. இப்பணிகளை சென்னை குடிநீர் வாரியம் தனிக்கவனம் செலுத்தி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
இயந்திர துளை அமைக்கும்போது, நெடுஞ்சாலைத் துறையுடன் ஆலோசனை செய்து, பணிகளை உடனுக்குடன் முடிக்க வேண்டும். சாலையில் 11 கி.மீ நீளத்தில், 2.750 கி.மீ அளவிலான பகுதிகளில் நிலஎடுப்பு நிலுவையில் உள்ளது. மின்பெட்டிகள் மற்றும் புதை மின்வடங்கள் மாற்றியமைக்கும் பணிகள், பாதாளச்சாக்கடைப் பணிகள் போன்றவை முடிக்கப்படாமல் சாலை விரிவாக்கப்பணிகளுக்கு இடையூறாக உள்ளது. இப்பணிகளை முடித்தப் பின்னர்தான் சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள முடியும். எனவே, இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
தேவையான சாலைகள் தடுப்பான்கள், முன்னெச்சரிக்கைப் பலகைகள் ஆகிய பாதுகாப்பு உபகரணங்களுடன் குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலங்கரை, ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து கிழக்குக் கடற்கரைச் சாலைப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும், என்று எ.வ.வேலு பேசினார்.
அமைச்சர் நடத்திய ஆய்வில், நெடுஞ்சாலைத்துறை செயலர் ஆர்.செல்வராஜ், சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, நீலங்கரை உதவி காவல் ஆணையர் த.ஏ.பாரத், நெடுஞ்சாலைத்துறை சிறப்பு அலுவலர் இரா.சந்திரசேகர், சென்னை பெருநகரத் தலைமைப் பொறியாளர் எஸ்.ஜவஹர் முத்துராஜ், சென்னை குடிநீர் வாரிய தலைமைப் பொறியாளர் ஆர்.கண்ணன், சென்னை பெருநகரத்திட்ட வட்டத்தின் கண்காணிப்புப் பொறியாளர் பா.பாஸ்கரன், நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் விஜயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.