டெல்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையில் உள்ள குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளியின் உடல் நிலை சீராக இருப்பதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
டெல்லி அமைச்சர் பரத்வாஜ் மருத்துவமனையில் குரங்கம்மை மற்றும் டெங்கு நோய்களை கையாளுவதற்கான ஆயத்தநிலைகள் குறித்து திடீர் ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அமைச்சர், “டெல்லி எல்என்ஜேபி மருத்துவமனையில் ஒருவர் குரங்கம்மை நோய் உறுதிப்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சமீபத்தில் பயணம் செய்தற்கான வரலாறு உள்ளது. அவர் வெளிநாட்டு பயணத்தில் இருந்த போது பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அந்த நோயாளி பிரத்யேக வார்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் இப்போது நலமாக இருக்கிறார். குரங்கு அம்மை பற்றி அச்சப்படத் தேவையில்லை. ஏனென்றால் அது காற்றின் மூலம் பரவுவதில்லை. தொடர்புகள் மூலமே பரவுகிறது.” என்று தெரிவத்தார்.
முன்னதாக, மத்திய சுகாதார அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டிருந்த அறிக்கையில், “வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி இருந்தது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர் நலமுடன் உள்ளார். அவரது ரத்த மாதிரி, ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் யாருடன் தொடர்பில் இருந்தார் என்ற விவரங்களை சேகரித்து வருகிறோம். இது இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்றும் ஆய்வு செய்து வருகிறோம்’ என்று கூறப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்ட இளைஞர் டெல்லி அரசு நடத்தும் எல்என்ஜேபி மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். எல்என்ஜேபி மருத்துவமனை குரங்கம்மை நோய் சிகிச்சைக்கான மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 2 மருத்துமனைகள் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
எல்என்ஜேபி மருத்துவமனையில் உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கான 10 படுக்கைகள் உட்பட மொத்த 20 தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் உள்ளன. அதேபோல், குரு தேக் பகதூர் (ஜிடிபி) மருத்துமனை மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் மருத்துவமனையில் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கான 5 படுக்கைகள் உட்பட தலா 10 அறைகள் உள்ளன.
ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி வருகிறது. ஏராளமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால், சுகாதார அவசரநிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.