தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பூவத்தூரில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தால் தலைமை ஆசிரியர் பள்ளி வகுப்பறைகளை பூட்டியதால் பள்ளிக்கு வந்த மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்
இடைநிலை தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுப் பள்ளியின் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதியின் படி பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவில் உள்ள ஆசிரியர்கள் (டிட்டோ-ஜாக்) இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பூவத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆசிரியர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். இதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கண்ணகி வகுப்பறைகளை பூட்டியதால் பள்ளிக்கு வந்த மாணவர்கள் பள்ளிக்கு வெளியே வெயிலில் அமர்ந்து படிக்கக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். ஒரு சில தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்திருந்த நிலையில், அவர்களையும் தலைமை ஆசிரியர் தடுத்து நிறுத்தி வகுப்பறைக்குள் செல்லக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்ததாக பெற்றோர்கள் தரப்பில் தெரிவித்தனர்.
பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து தலைமை ஆசிரியை வகுப்பறைகளை திறந்து விட்டதால் வழக்கம்போல் வகுப்பறைக்குள் அமர்ந்து மாணவர்கள் பாடம் பயின்றனர்.