இந்தியாவில் சீக்கியர்களின் நிலைமை குறித்து மீண்டும் கருத்து தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்கு தொடர்வேன் என்று பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.சிங் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முக்கியத் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அங்கு வெர்ஜினியாவில் உள்ள இந்தியர்களுடன் உரையாடல் நடத்தினார். அப்போது அவர், இந்தியாவில் தற்போது நடக்கும் சண்டை என்பது, அங்கு சீக்கியர்கள் தலைப்பாகை, கடா அணிய அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்ததே என்றார்.
அங்கிருந்த ஒருவரின் பெயரினைக் கேட்ட ராகுல் காந்தி, “முதலில் அது எதற்கான போராட்டம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அது அரசியலுக்கான போராட்டம் இல்லை. மிகவும் மேலோட்டமானது. சீக்கியரான அவர் இந்தியாவில் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவாரா? அல்லது சீ்க்கியர்கள் கடா அணிய அனுமதிக்கப்படுவார்களா, அவர்கள் குருத்துவாருக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்களா என்பதற்கான சண்டை அது. இது சீக்கியர்களுக்கான போராட்டம் மட்டும் இல்லை அனைத்து மதத்துக்குமான போராட்டம்” என்று தெரிவித்திருந்தார்.
ராகுல் காந்தியின் இந்தக் கருத்தை பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.சிங் கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “டெல்லியில் 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் தலைப்பாகை அகற்றப்பட்டது. தலை முடி வெட்டப்பட்டது, தாடி மழிக்கப்பட்டது. அது எல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் தான் நடந்தது என்று அவர் (ராகுல்) சொல்லவில்லை. சீக்கியர் பற்றி அவர் என்ன சொல்கிறாரோ அதனை இந்தியாவில் மீண்டும் சொல்ல முடியுமா என்று நான் அவருக்கு சவால் விடுகிறேன். நான் அவர் மீது வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்வேன்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே ராகுல் காந்தியின் கருத்துக்களாக அவரை பாஜக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறுகையில், “ராகுல் காந்தி இன்று ஒரு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர். எதிர்க்கட்சித் தலைவர் என்பது மிகவும் பொறுப்பான பதவி. அடல் பிஹாரி வாஜ்பாய் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, வெளிநாடுகள் ஒருபோதும் இந்தியாவின் பெயரை கெடுப்பது போல் பேசியது இல்லை என்பதை நான் ராகுல் காந்திக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். தொடர்ந்து மூன்றாவது முறையாக தோல்வியடைந்ததால், அவரின் மனதில் பாஜக எதிர்ப்பு, ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு மற்றும் மோடிக்கு எதிரான உணர்வு வேரோடிப் போய் உள்ளது.
அவர் தொடர்ந்து நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்துவது தேச துரோகமாகும். நாட்டின் அரசியலமைப்பு மீது தாக்குல் நடத்துவது யார்? அவசர நிலையை அமல்படுத்தியது யார்? அவர் இந்திய ஒற்றுமை யாத்திரை செல்கிறார். ஆனால் அவரால் இந்தியா மற்றும் இந்திய மக்களுடன் ஒன்றுபட முடியவில்லை” என்று சவுகான் சாடியுள்ளார்.