அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை இதுவரை நிறைவேற்றாத நிலையில், பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு விட்டதாக தவறான தகவலை அமைச்சர் தெரிவித்துள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு (LCC) அதிருப்தி தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட அறிக்கையில், “தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊதியக் கோரிக்கையை பொறுத்தவரை 293, 354 ஆகிய இரு அரசாணைகள் குறித்து மருத்துவர்களின் சங்கங்களுக்கு இடையே மாறுபட்ட கருத்து இருந்தது. அவர்களுக்குள் ஒருமித்த கருத்தை உருவாக்கி அந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாக தவறான தகவலை தெரிவித்துள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது.
அதுவும் அரசு மருத்துவர்கள் அரசாணை 354-ஐ அமல்படுத்த வேண்டும் என்ற ஒரே கோரிக்கைக்காக ஒருமித்த கருத்துடனே போராடி வந்தனர். யாருமே கேட்காத அரசாணை 293 என்ற புதிய ஆணையை வெளியிட்டு மருத்துவர் சங்கங்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்தியதே திமுக ஆட்சி அமைந்த பிறகுதான். அப்படியிருக்க 34 முறை பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்திருக்கும் அமைச்சர், அரசாணை 354 வேண்டும் என மருத்துவர்கள் நீண்டகாலமாக கோரி வரும் நிலையில், அதை செய்யாமல் புதிய அரசாணையை வெளியிட்டது ஏன் என்பதற்கு அமைச்சர் பதில் சொல்ல வேண்டும்.
அந்த அறிக்கையில், மருத்துவர்கள் இங்கு மட்டுமல்ல உலக அளவில் மதிக்கப்பட வேண்டிய சமூகத்தை சார்ந்தவர்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் தமிழகத்தில் மட்டுமே அரசு மருத்துவர்கள் உரிய ஊதியம் வேண்டி நீண்டகாலமாக போராடி வருகிறார்கள் என்பதை அமைச்சருக்கு நினைவுப்படுத்த விரும்புகிறோம்.
அதுவும் திமுக ஆட்சி அமைந்த பிறகு, ஊதியக் கோரிக்கைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ள வந்த மருத்துவர்களை, காவலர் மூலம் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினார்கள். அதாவது, ஜனநாயக நாட்டில் அமைதியாக போராட்டம் நடத்துவதற்கு கூட உரிமை மறுக்கப்பட்டதை மருத்துவர்களால் மறக்க முடியாது.
கோரிக்கைக்காக போராடிய டாக்டர் லட்சுமி நரசிம்மன் உயிர் தியாகம் செய்தது குறித்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், எந்த கோரிக்கைக்காக அவர் உயிரை கொடுத்தாரோ, அந்த கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்பதை மட்டும் ஏன் அமைச்சர் நினைத்து பார்க்கவில்லை?
அரசாணை 354-ஐ அமல்படுத்த வேண்டும் என சட்டசபையில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் அரசை வலியுறுத்தியபோது அமைச்சர் பதிலேதும் தெரிவிக்கவில்லை. கலைஞரின் நினைவிடத்தில் கோரிக்கை மனு சமர்ப்பிக்க சென்று மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட போதும் அமைச்சர் மவுனமாகவே இருந்தார்.
பொதுவாக தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிமுறைகளை அரசு பின்பற்றி வருகிறது. ஆனால், நாடு முழுவதும் அரசு மருத்துவர்களுக்கு டெல்லி எய்ம்ஸுக்கு இணையான ஊதியம் தரப்பட வேண்டும் என அறிவுறுத்திய நிலையில் இதுவரை அதை அமல்படுத்தவில்லை.
அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை 6 வாரத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு 6 மாதங்கள் கடந்த பின்னரும் அரசு நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை. அதேநேரத்தில் அரசாணை 354-ஐ அமல்படுத்த முடியாது என மருத்துவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அரசு உத்தரவு ஒன்றை வெளியிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அரசு மருத்துவர்கள் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், 8 வாரத்திற்குள் (அக்டோபர் 28-ம் தேதிக்குள்) பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.
இத்தகைய நிலையில் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையில் தீர்வு காணப்பட்டு விட்டதாக அமைச்சர் சொல்வது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல உள்ளது. திறமையுள்ள அமைச்சர் இவ்வாறு கூறுவது என்பது உண்மைக்கு புறம்பானது மட்டுமல்ல, கழக அரசு தங்களுக்கு விடிவு தரும் என்று காத்திருந்த இளம் மருத்துவர்களின் வாழ்க்கையை அடர்ந்த இருள் அடையச் செய்துள்ளது.
தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்பேற்றபோது, கொரோனா தொற்றின் உச்சத்தால், இதுவரை எந்த முதல்வருமே சந்தித்திராத வகையில், அசாதாரண சூழ்நிலை நிலவியது. அந்த கடினமான தருணத்தில் தங்கள் உயிரை பணயம் வைத்து, அரசுக்கு உறுதுணையாக இருந்த அரசு மருத்துவர்களை முதல்வரால் என்றும் மறக்க முடியாது என நம்புகிறோம்.
கொரோனா பேரிடரின் போது அரசு மருத்துவர்களின் சேவையை அங்கீகரித்து கர்நாடகா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றினார்கள். ஆனால் இங்கு 3 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக அரசு கோரிக்கையை நிறைவேற்றாமல் மருத்துவர்களை வேதனைப்பட வைத்த நிலையில், தற்போது தீர்வு காணப்பட்டு விட்டதாக அமைச்சர் தவறான தகவலை தெரிவித்துள்ளது, 19 ஆயிரம் அரசு மருத்துவர்களின் தலையில் இடி விழுந்தது போல உள்ளது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
2019-ம் ஆண்டு போராட்டத்தின்போது எதிர்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அரசு மருத்துவர்களிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பது ஏன்? திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் அரசாணைக்கு தடை போடுவது ஏன்? இதுபோன்ற கேள்விகளுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் பதில் சொல்வார்களா?
எனவே, இதுவரை திமுக அரசால் ஏமாற்றப்பட்டுள்ள, துரோகம் இழைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்களை, இதற்கு மேலும் காயப்படுத்துவதை விடுத்து அரசாணை 354-ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்க நடவடிக்கை எடுக்க அமைச்சரை வேண்டுகிறோம்.
மக்களின் உயிர்காக்கும் பணியில் உள்ளவர்களை சூழ்ச்சியால் வீழ்த்த முற்படுவது வரலாற்றின் பக்கங்களில் அழியாத கறையாக படிந்து விடும் என்பதையும் மிகுந்த வேதனையுடன் நினைவுப்படுத்த கடமைப்பட்டுள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.