தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும், “நமக்கு என்று தாய்வீடாக தமிழ்நாடு இருக்கிறது” என்ற உணர்வை நம்பிக்கையை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஏற்படுத்தி வருகிறது என்று அமெரிக்காவின் சிகாகோ நகரில், அமெரிக்க வாழ் தமிழர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
அமெரிக்க நாட்டின் சிகாகோவில், சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் நான் முதலமைச்சராக – திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டால், எப்படி இருக்குமோ, அதைவிட அதிகமான உணர்வுப்பெருக்கோடு சிகாகோவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.
தமிழ் மண்ணில் இருக்கும் மாதிரியான உணர்வை எனக்கு ஏற்படுத்தியிருக்கும் உங்களுக்கு, உங்களில் ஒருவனாக – உங்கள் குடும்பங்களில் ஒருவனாக நான் எனது இதயபூர்வமான நன்றியை மீண்டும் மீண்டும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குப் சென்று அதற்குப் பிறகு, அமெரிக்காவுக்கு லேட்டாக வந்திருந்தாலும் லேட்டஸ்டாக வரவேற்பு கொடுத்திருக்கிறீர்கள்.
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேசும்போது கூட சொன்னார், நான் எங்கள் பகுதிக்கு வர வேண்டும், எங்கள் ஊருக்கு வர வேண்டும் என்று ஒரு போட்டியே நடந்தது, அதில் சிகாகோ வெற்றி பெற்றுள்ளது. அப்படி வெற்றி பெற்றிருக்கக்கூடிய சிகாகோவிற்கு வந்து உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இதே சிகாகோவிற்கு நம்முடைய முன்னாள் முதல்வர் கருணாநிதி அமெரிக்க பயணத்தின்போது வந்திருக்கிறார். நான் இந்த நிகழ்ச்சிக்கு வருவதாக ஒப்புதல் தந்த பிறகு தலைவர் கருணாநிதி அமெரிக்கப் பயணத்தில் எங்கு எல்லாம் சென்றார் என்று எடுத்துப் படித்தேன். 1971-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் நாள் வாஷிங்டனுக்கு வந்த தலைவர் கருணாநிதி பல்வேறு இடங்களை பார்வையிட்டிருந்தார். அதிலும் குறிப்பாக, ஆர்லண்டோ நகரில் நடைபெற்ற கலைவிழாவில் கலந்துகொண்டு, அங்கிருந்து நீரூற்றைப் பார்த்து ஒரு கவிதை எழுதி, அங்கிருந்து சென்னைக்கு அனுப்பி வைத்தார். அதை நான் முரசொலியில் படித்து பார்த்தேன். அந்த கவிதையில் சொல்லியிருக்கிறார்:
“ஆர்லந்தோ எனும் நகரில் அரியதோர் ஏரியிலே அழகிய மத்தாப்பூ ஊற்றொண்டு கண்டேன் ஒளிவிளக்குப் போடுகின்ற தாளத்திற்கு ஒரு லயமும் பிசகாமல் ஆடுகின்ற நீரூற்று ஆட்டக்காரி நாட்டியத்தின்
நேர்த்தி யென்ன சொல்வேன்!” – என்று தொடங்கும் அந்தக் கவிதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அடுத்து, இதே சிகாகோவுக்கு வந்திருந்தார். வந்தவர், சிகாகோ பல்கலைக்கழகத்தின் அரசியல் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
பின்னர் நியூயார்க் சென்று, நியூயார்க் தமிழ்ச் சங்கத்தை தொடங்கி வைத்தார். அப்போது எப்படி தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற தகுதியோடு தலைவர் கருணாநிதி வந்தாரோ, அதேபோல் இன்று நானும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற தகுதியோடு இங்கு வந்திருக்கிறேன். நம்முடைய திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, தமிழ்நாடு எப்படியெல்லாம் முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்று, இங்கிருந்து தமிழ்நாட்டில் இருக்கும் உங்கள் உறவுகளிடம் நிச்சயமாக பேசிக் கேட்டிருப்பீர்கள், செய்திகளில் படித்திருப்பீர்கள், எப்படி இருக்கிறது உங்களிடம் கேட்கிறேன்? (மக்கள் மிக சிறப்பு என்று கூறினர்).
தொழில் வளர்ச்சியை பொருத்தவரைக்கும், நான் எந்த நாட்டுக்குச் சென்றாலும், எந்த நிறுவனங்களின் அதிபர்களை சந்தித்தாலும், இந்தியாவிலேயே தமிழ்நாடு எப்படியெல்லாம் முன்னிலை வகிக்கிறது – தமிழ்நாட்டில் என்னென்ன சிறப்புகள் இருக்கின்றன என்று சொல்லி, தொழில் தொடங்க வாருங்கள் என்று நான் அழைப்பு விடுப்பேன். அதனால்தான், முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெருமையை அடைந்திருக்கிறோம்.
எந்த நாட்டுக்கு நான் அரசுமுறைப் பயணமாக சென்றாலும், என் எண்ணம் எல்லாம், அங்கு வாழும் நம்முடைய தமிழர்களை சந்திக்க வேண்டும், அங்கு இருக்கும் தமிழ் அமைப்புகளை சந்திக்க வேண்டும் என்றுதான் இருக்கும். அப்படி நான் பல்வேறு நாடுகளுக்குச் சென்று தமிழர்களை சந்தித்திருந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் அதிகமாகப் புலம்பெயர்ந்து வாழும் நாடான அமெரிக்காவில் உங்கள் முகங்களை பார்க்கும் போது, மீண்டும் சொல்கிறேன் பேசாமல் அப்படியே நின்று கொண்டு உங்களையே பார்த்துக்கொண்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது.
அந்தளவுக்கு உங்கள் பாசமும் அன்பும் என்னை கட்டிப்போட்டிருக்கிறது. இந்தத் தருணத்தில், நான் குறிப்பிட விரும்புவது ஈராயிரம் ஆண்டுகள் அன்னைத் தமிழகம் தவமிருந்து பெற்றெடுத்த தலைமகன். ‘சிங்க நடையும் சிங்காரத் தெள்ளு நடையும் பொங்கு கடல்நடையும் புரட்சிக் கவிநடையும் தன்னுடைய உரைநடையால் கண்ட கோமான் – தம்பிமார் படைமீது விழியொற்றி வெற்றி கண்டிருக்கும் பூமான். பூமிப்பந்தில் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்க்கிறார்களோ, அங்கு எல்லாம் வாழ்ந்திருக்கக்கூடிய அறிவுலக ஆசான், ஒப்பற்ற தலைவர் பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருகிறது.
“அனைவரும் பிறக்க ஒரு தாய் வயிறு தாங்காது என்ற காரணத்தால் தான், தனித்தனி தாயினுடைய வயிற்றில் பிறந்த அன்பு உடன்பிறப்புகள் நாம்” என்று சொல்வார். நாமெல்லாம் தனித்தனி தாயுடைய வயிற்றில் பிறந்திருந்தாலும் – நாம் எல்லோருக்கும் இந்த உறவை – பாசத்தை ஊட்டிய ஒரு தாய் இருக்கிறார், அவர்தான் தமிழ்த்தாய்.
உளங்கவர் ஓவியமே! உற்சாகக் காவியமே! ஓடை நறுமலரே! ஒளியுமிழ்ப் புதுநிலவே! அன்பே! அழகே! அமுதே! உயிரே! இன்பமே! இனியத் தென்றலே! பனியே! கனியே! பழரசச் சுவையே! மரகத மணியே! மாணிக்கச் சுடரே! மன்பதை விளக்கே! – என்றெல்லாம் தமிழை அழைக்கத் தோன்றுகிறது. இருந்தாலும் தமிழை தமிழே என்று அழைக்கக்கூடிய சுகம் வேறு எதிலும் இருக்காது.
அந்தத் தமிழ்த்தாயின் குழந்தைகள் நாம் என்பதுதான் நம்முடைய பெரும் அடையாளமாக இருக்கிறது. கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சி ஒன்றை பார்த்தேன். நம்முடைய தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் ‘வேர்களைத் தேடி’ திட்டத்தின் மூலமாக, தமிழ்நாட்டை பார்க்க நம்முடைய பண்பாட்டை இறுகப் பற்றிக்கொள்ள நம்முடைய சொந்தங்களை அடையாளம் காண வந்த இளைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி அது.
சூழ்நிலைகளின் காரணமாக தொலைதூர தேசங்களுக்கு வந்து தாய்த் தமிழ்நாட்டின் தொடர்பை இழந்து இன்றைக்கு மீண்டும் தாய் மண்ணின் வாசத்தை தாய் மண்ணின் அரவணைப்பை உணர்ந்த இளைஞர்களின் உணர்ச்சிக் குவியலாக அந்த நிகழ்ச்சி இருந்தது. அதிலும் ராதிகா என்ற மியான்மர் நாட்டைச் சேர்ந்த நம் சகோதரி, பல ஆண்டுகளாக விட்டுப்போன உறவை மீண்டும் கண்டுபிடித்து நா தழுதழுக்க பேசியது என் நெஞ்சிலேயே இருக்கிறது.
தன்னுடைய வள்ளிப்பாட்டியைக் கண்டுபிடிக்க நினைத்த அவர், இப்போது தன் மாமா வீட்டோடு சேர்ந்திருக்கிறார். “அங்கு கலாச்சாரம் எல்லாம் இருக்கிறது. ஆனால், சொந்தக்காரர்கள் குறைவு” என்று சொல்லி அவர் கலங்கியது, உறவுகளை பிரிந்து ஏங்கும் அத்தனை அயலகத் தமிழர்களின் உணர்வின் பிரதிபலிப்பாக இருந்தது. எப்படிப்பட்ட வரலாற்றுக்கும் – பண்பாட்டுக்கும் சொந்தக்காரர்கள் நாம்? இனம், மொழி, நாடு, சாதி, மதம், பால், வர்க்கம், நிறம் என்று எந்தப் பாகுபாட்டுக்கும் இடமளிக்காமல், உலக உயிர்கள் அனைத்துக்குமான பொதுமறையைத் தந்த வான்புகழ் வள்ளுவரை தந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் நாம்!
ஊரைத் தாண்டிய ஊரும் உலகமும் எப்படி இருக்கும் என்று அறியாக் காலத்திலேயே, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று எல்லோரையும் சொந்தமாக கருதி இலக்கியம் படைத்த புகழுக்குச் சொந்தக்காரர்கள் நாம்! கீழடி கண்டுபிடிப்புகள் மூலமாக, நான்காயிரம் ஆண்டுக்கு முன்பாகவே எழுத்தறிவு பெற்றும், நகர நாகரிகத்துடனும் மேம்பட்ட சமூகமாக வாழ்ந்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் நாம்! அதனால்தான் இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்படவேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்கிறேன்.
இப்படிப்பட்ட பெருமைக்கும், திறமைக்கும், ஆற்றலுக்கும், அன்புக்கும் சொந்தக்காரர்களான தமிழினம் இன்றைக்கு பல நாடுகளில் பல்வேறு உயர் பொறுப்புகளில் இருக்கிறோம். அந்த உயர்பொறுப்புகளுக்குக் கடைக்கோடியில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களும் வரமுடியும் என்பதைச் சாத்தியப்படுத்தியது, நம்முடைய தமிழ்நாட்டில் இருக்கும் சமூகநீதியும் அதற்காகப் பாடுபட்ட தலைவர்களும்தான்!
இதுதான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், தமிழினத் தலைவர் கலைஞரும் காணப் பாடுபட்ட சமுதாயம்! அதற்காகத்தான், நீதிக்கட்சி ஆட்சி, பெருந்தலைவர் காமராசர் ஆட்சி, நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்று, தொடர்ந்து தமிழ்நாடு கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்! தலைவர் கலைஞர் கணினிக் கல்விக்கு தந்த முக்கியத்துவத்தால்தான், ஐ.டி. துறையில் தமிழ்நாடு முன்னேறியது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கிய டைடல் பூங்கா மாதிரி அப்போது வேறு எந்த மாநிலத்திலும் பெரிதாக இல்லை. கருணாநிதி அமைத்த அடித்தளத்தில், உலகத்தை தமிழ்நாட்டை நோக்கி ஈர்த்தோம்; தமிழ்நாட்டை உலகம் உள்வாங்கியது. அதற்கு சாட்சியங்களாகத்தான் நீங்கள் இருக்கிறீர்கள்! தமிழ்நாட்டுத் தமிழர்களை மட்டுமல்ல; உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பரணாக நமது திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டில் இருக்கிறது.
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்காக ‘அயலகத் தமிழர் நல வாரியம்’ உருவாக்கி இருக்கிறோம். ஜனவரி 12-ஆம் நாளை அயலகத் தமிழர் நாளாக கொண்டாடுகிறோம். அந்த வாரியத்தின் மூலமாக, ‘தமிழால் இணைவோம்’, ‘உலகெங்கும் தமிழ்’, ‘தமிழ் வெல்லும்’ ஆகிய தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டிருக்கின்றன.
வெளிநாடுவாழ் தமிழர்களுக்காக கட்டணமில்லா உதவி மையம் தொடங்கப்பட்டிருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களின் சொந்த ஊர்களை மேம்படுத்தும் ‘எனது கிராமம்’ என்ற திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. அயலகத் தமிழர்க்கு கணியன் பூங்குன்றனார் விருது வழங்கப்படுகிறது! அயல்நாடுகளில் பணிக்குச் சென்று, அங்கு இறக்க நேரிடுபவர்களின் குடும்பத்திற்கு நிதி வழங்கப்படுகிறது.
உக்ரைன் நாட்டுக்கு படிக்கச் சென்ற 1,524 மாணவர்களை போர் காலத்தில் மீட்டு வந்தோம். கம்போடியா, தாய்லாந்து, மியான்மரில் இருந்து 83 தமிழர்களை மீட்டு வந்தோம். இஸ்ரேல் நாட்டுக்கு கல்வி கற்கச் சென்று படிப்பை தொடர முடியாத 126 பேரை மீட்டோம். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 2,398 பேரை அயல்நாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் மீட்டு வந்தோம்.
மொத்தத்தில், தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும், “நமக்கு என்று தாய்வீடாக தமிழ்நாடு இருக்கிறது” என்ற உணர்வை நம்பிக்கையை நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஏற்படுத்தி வருகிறது. இது அனைத்துக்கும் முத்தாய்ப்பான திட்டம்தான் ‘வேர்களைத் தேடி’ என்று, அயலகத்தில் வாழும் நம்முடைய குழந்தைகளை தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும் திட்டம். அதனால்தான், நான் எப்போதும் சொல்வேன்: “இது ஒரு கட்சியின் அரசல்ல; ஒரு இனத்தின் அரசு.
சாதி – மத வேறுபாடுகளை வீழ்த்தும் வல்லமையும், எல்லோரையும் ஒற்றுமைப்படுத்தும் வலிமையும் தமிழுக்குதான் இருக்கிறது. “வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்ற உணர்வு கொண்டவர்கள் நாம். இந்த எண்ணத்தை விதைத்தது திராவிட இயக்கம்! உலகத்தில் வேறு எந்த இனத்துக்கும் இல்லாத பெருமை நம் தமிழினத்துக்கு உண்டு. தங்களின் இன்னுயிரையும் தீக்குத் தின்னக் கொடுத்து, தாய்மொழியைக் காத்த தியாக மறவர்கள் நாம்! அந்தத் தியாக மறவர்களை கொடுத்த திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவன் நான் என்ற கர்வம் எனக்குண்டு!
மொழிப்பற்றுக்கும் மொழிவெறிக்குமான வேறுபாட்டையும் – இனப்பற்றுக்கும் இனவெறிக்குமான வேறுபாட்டை அறிந்தவர்கள் நாம்! இங்கு கூடியிருக்கும், உங்களில் சிலர் மட்டும்தான் இந்த நாட்டுக்கு விரும்பி வந்திருப்பீர்கள். மற்றவர்கள், சூழ்நிலைகளின் காரணமாகவும் பணிகளுக்காகவும் இங்கு வந்திருப்பீர்கள். அப்படி வந்து உங்கள் திறமையால் உயர்ந்த இடங்களை அடைந்திருக்கிறீர்கள். கிணற்றுத் தவளைகள் அல்ல தமிழர்கள்; வானத்தையே வசப்படுத்தும் வானம்பாடிகள் என்பதற்கான பொருள் நீங்கள்! திறமையால் தமிழன் தலைநிமிர்ந்து வாழ்வான் என்பதன் அடையாளம் நீங்கள்!
உங்களிடம் நான் வைக்கும் ஒரே கோரிக்கை. உங்களுக்குள் எந்தப் பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள். ஒரு தாய் மக்களாக வாழுங்கள். உங்கள் உயர்வுக்குக் காரணமான அறிவையும், உழைப்பையும் மட்டும் நம்பி, வாழ்க்கைப் பயணத்தை தொடருங்கள். உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது எல்லாம். ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்குக் குழந்தைகளோடு வாருங்கள். வானுயர்ந்து நிற்கும் வள்ளுவரை காட்டுங்கள். நம்முடைய வரலாற்றின் அடையாளமாக விளங்கும் கீழடி அருங்காட்சியகத்தை காட்டுங்கள்.
சிவகளை, கொற்கை, பொருநை போன்ற இடங்களுக்கு அழைத்துசெல்லுங்கள். உங்களால் முடிந்த செயல்களை தமிழ்நாட்டுக்குச் செய்யுங்கள். தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும் உங்கள் குழந்தைகளிடம், “நம்முடைய குடும்பத்தை சேர்ந்த ஒருவர்தான் இங்கு முதலமைச்சராக இருக்கிறார். அவர் தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என்று சொல்லுங்கள். நான் இங்கிருந்து தமிழ்நாட்டுக்கு திரும்பிய பிறகும், உங்களின் இந்த ஆரவாரமும் மகிழ்ச்சியான முகங்களும்தான் எப்போதும் என் ஞாபகத்துக்கு வரும்” என்றார் முதல்வர்.