திருநெல்வேலி மாவட்டம், மானூர் அம்பலவாணசுவாமி கோயிலில் இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கிவைத்தார். விழாவில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறும்போது, “மானூர் அம்பலவாண சுவாமி கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோயில். இந்த கோயிலில் கடைசியாக 117 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடுமுழுக்கு நடந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் போதிய அளவு வருமானம் இல்லாத தொன்மையான கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்த 2021-22ம் ஆண்டு ரூ. 6 கோடி ஒதுக்கினார். ஆறாவது சபையாக வர்ணிக்கப்பட்ட அம்பலவாண சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது மகிழ்ச்சியளிக்கிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த வருமானம் இல்லாத கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்த 2022- 23, 2023-24, 2024-25 ஆகிய 3 நிதியாண்டுகளில் ஆண்டுக்கு 100 கோடி வீதம் 300 கோடி ரூபாய் தமிழக முதல்வர் ஒதுக்கீடு செய்தார். பக்தர்கள் உபயமாக ரூ.142 கோடி பெறப்பட்டுள்ளது. இதுவரை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த 37 கோயில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது. இதுவரை 2098 கோயில்களுக்கு திமுக ஆட்சியில் குடமுழுக்கு நடந்துள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் 55 கோயில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது.
அம்பலவாண சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டு, கோயில் பணிகளுக்கு செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பணிகள் நடந்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆன 16 கோயில்கள், திருப்பணிகள் நடந்து 50 முதல் 100 ஆண்டுகள் ஆன சுமார் 60 கோயில்களுக்கு திருப்பணிகள் நடந்து, குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. 805 கோயில்களுக்கு சொந்தமான ரூ. 6,703 கோடி மதிப்புள்ள 6,857 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு, எல்லைக் கற்கள் நடப்பட்டுள்ளன. ரூ. 92 கோடி மதிப்பில் 47 ராஜகோபுரங்கள் கட்டப்படுகின்றன. ரூ. 59 கோடி செலவில் 97 புதிய மரத்தேர்கள் கட்டப்பட்டு வருகின்றன. 53 தேர்கள் ரூ.11.93 கோடி செலவில் மராமத்து செய்யப்பட்டு வருகின்றன.
172 தேர் கொட்டகைகள் ரூ. 28.44 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகின்றன. ரூ. 29 கோடி மதிப்பில் 5 தங்கத் தேர்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 9 புதிய வெள்ளித் தேர்கள் ரூ.27 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகின்றன. புதிதாக 4 கோயில்கள் ரூ.3.07 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருகின்றன. ரூ.120.33 கோடி செலவில் 220 கோயில் குளங்கள் பழுதுபார்க்கப்பட்டு வருகின்றன. ரூ.301.67 கோடி மதிப்பில் 85 புதிய திருமண மண்டபங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ரூ.86.97 கோடி மதிப்பில் 121 அன்னதான கூடங்கள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன.
ரூ.187.05 கோடி மதிப்பில் பக்தர்களுக்காக 28 தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. ரூ.136.66 கோடி மதிப்பில் அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்களுக்கு 89 குடியிருப்புகள் 500 வீடுகளுடன் கட்டப்பட்டு வருகின்றன. 19 கோயில்களில் ரூ.1530 கோடி செலவில் பெருந்திட்ட வரைவு மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.20.30 கோடி செலவில் சோளிங்கரிலும், ரூ.9.10 செலவில் ஐயர்மலையிலும் ரோப்கார் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. திருநீர்மலை, திருப்பரங்குன்றத்தில் ரூ.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.3.55 கோடி மதிப்பில் சுவாமிமலையில் தானியங்கி லிப்ட் அமைக்கும் பணி, மருதமலையில் ரூ.5.20 கோடி மதிப்பில் தானியங்கி லிப்ட் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
இதுபோல் எண்ணற்ற பணிகளை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி செய்து வருகிறது. திராவிட மாடல் ஆட்சிதான் இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் பொற்கால ஆட்சியாக கருதப்படும். அறநிலையத்துறையில் இதுவரை ரூ.5,372 கோடி செலவில் 20,252 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநில வல்லுநர் குழுவால் 9,961 கோயில்களில் கட்டிட திருப்பணி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட ஒரு நாள் போதாது. இந்த சாதனைகள் தொடர்ந்து நடைபெறும்.
கிராமப்புறங்களில், ஆதிதிராவிடர் பகுதிகளில் உள்ள கோயில் திருப்பணிக்கு இதுவரை ரூ.1 லட்சம் மட்டும்தான் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.2 லட்சமாக உயர்த்தினார். கோயில் திருப்பணிகளுக்கு அறநிலையத்துறையிடம் அனுமதி பெறுவது அவசியம். அனுமதி மறுக்கப்பட்டால் அனுமதி பெற்று தரப்படும். எந்த பணிகளுக்கும் அறநிலையத்துறை தடை விதிக்கவில்லை” என்று பி.கே.சேகர்பாபு கூறினார்.