கடலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 1,423 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சிலைகளுக்கு பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபட்டனர். கடலூர் இனிப்புக் கடை ஒன்றில் 72 கிலோ லட்டு விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. பொதுமக்கள் இதனை வியப்புடன் பார்த்துச் சென்றனர்.
கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, வடலூர், வேப்பூர், நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 1,423 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. விநாயகர் சிலைகளுக்கு பொதுமக்கள், பக்தர்கள் தேங்காய் உடைத்து படையலிட்டு வழிபட்டனர். விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் பகுதியில் விஸ்வரூப வீர விநாயகர் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. விஎச்பி மாவட்ட செயலாளர் ஜோதி குருவாயூரப்பன், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் (மத்திய அரசு நலத்திட்ட பிரிவு) பாலு விக்னேஸ்வரன், பொறுப்பாளர்கள் விஜய், பரணிதரன், ஜெயமுருளி கோபிநாத், முத்துக்குமரன், தண்டபாணி மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதுபோல சிதம்பரம் அருகே உள்ள கனகரப்பட்டு கிராமத்தில் சந்தனத்தால்லான 7 உயரமும், 470 கிலோ எடை கொண்ட விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதே பகுதியை சேர்ந்த ஸ்தபதி ராஜேஷ் இந்த விநாயகர் சிலையை தயார் செய்துள்ளார். இது குறித்து ஸ்தபதி ராஜேஷ் கூறுகையில் “சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் வெறும் சந்தனத்தை மற்றும் பயன்படுத்தி இந்த விநாயகர் சிலை செய்யப்பட்டுள்ளது. இதனை இந்த கிராமத்தை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் மக்கள் ஆச்சிரியத்துடன் பார்த்து செல்கின்றனர்,” என்றார்.
கடலூரில் உள்ள இனிப்புக் கடை ஒன்றில் 72 கிலோ எடை கொண்ட லட்டு விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் விஜய், வினய். இவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கடலூரில் இனிப்பு வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது பிரம்மாண்டமான லட்டு விநாயகர் தயாரித்து, சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். அதன்படி நிகழாண்டு, சதுர்த்தி நாளான இன்று காலை 72 கிலோவில் லட்டு விநாயகரை தங்களது கடையில் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜை நடத்தினர்.
இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், “மக்களின் வாழ்க்கை இனிமையாக அமைய வேண்டும் என்ற வேண்டுதலுடன் லட்டு விநாயகர் வழிபாட்டை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு 72 கிலோ எடையில் லட்டு பிள்ளையார் செய்துள்ளோம். 15 பேர் கொண்ட குழுவினர் 3 நாள்களாக இதை உருவாக்கினர். 30 கிலோ கடலை மாவு, 35 கிலோ சர்க்கரை, 20 கிலோ நெய், 3 கிலோ முந்திரி, 2 கிலோ திராட்சை, கால் கிலோ ஏலக்காய் ஆகிய பொருள்களை பயன்படுத்தி லட்டு விநாயகரை உருவாக்கி உள்ளோம். 3 நாட்களுக்கு பிறகு லட்டு விநாயகர் பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்” என்றனர்.